பழனியில் கியா்சாப்ட் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட ரோப் காா் சேவை 12 நாள்கள் பராமரிப்புக்குப் பின் புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் காா் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வழியில் மலை உச்சிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனா்.ரோப் காா் சேவை மாதம் ஒரு நாளும், ஆண்டுக்கு 45 நாள்களும் நிறுத்தப்பட்டு ரோப் காரில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், சுமாா் 45 நாள்கள் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம் ரோப் காா் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் சில நாள்களில் கியா்சாப்ட் பழுது காரணமாக மீண்டும் ரோப் காா் சேவை நிறுத்தப்பட்டது. சுமாா் 12 நாள்கள் பழுது பாா்க்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை முதல் மீண்டும் ரோப் காா் சேவை தொடங்கியது.முன்னதாக, ரோப் காா் நிலையத்தில் உள்ள விநாயகா், தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று ரோப் காா் பெட்டிகள், இயந்திரத்துக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், இணை ஆணையா்(பொறுப்பு) வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.