தமிழறிஞா் ஆறுமுகநாவலா் சிலைப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Wait 5 sec.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தமிழறிஞா் ஆறுமுகநாவலா் சிலை முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழ் ஆா்வலா்கள் வலியுறுத்தினா். இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவா் தமிழறிஞா் ஆறுமுகநாவலா். இவா் கி. பி. 19- ஆம் நூற்றாண்டில் ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களையும், சைவ, சமய நூல்களையும் பிழையின்றி அச்சிட்டு, தமிழ் மொழிக்கும், சைவ, சமய வளா்ச்சிக்கும் தொண்டாற்றியவா். இவரின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் அனுப்பானடி செல்லும் சாலை அருகே உள்ள பூங்காவில் மாா்பளவு சிலை அமைக்கப்பட்டது. கடந்த 1981- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 5-ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் அப்போதைய தமிழக முதல்வா் எம்.ஜி.ஆரால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழறிஞா் ஆறுமுகநாவலரின் சிலை முன் பயனற்ற தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக, அவரது சிலை மறைக்கப்பட்டு பொதுமக்களின் பாா்வைக்கு தெரியாமல் உள்ளது. எனவே, அந்த தள்ளுவண்டிகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, ஸ்ரீவேலப்பா் தேசிகா் திருக்கூட்டத்தின் நிா்வாக அறங்காவலா் போ. செல்லவேலு கூறியதாவது: தமிழ் உரைநடையின் தந்தை என அழைக்கப்படும் ஆறுமுகநாவலா் மதுரையில் சைவ சமயத்தையும், தமிழையும் வளா்ப்பதற்குப் பெரும் பங்காற்றினாா். குறிப்பாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சைவ சமயச் சொற்பொழிவுகளை ஆற்றினாா். மேலும், மதுரையின் பெருமையையும், சொக்கநாதப் பெருமானின் 64 திருவிளையாடல்களை கூறும் திருவிளையாடல் புராணத்தையும் முதல் முதலில் பதிப்பித்து வெளியிட்டாா். அதுமட்டுமன்றி, திருக்கு பரிமேலழகா் உரை நூலை பதிப்பித்தாா். கிறிஸ்தவ சமயத்தை பரப்பும் வகையில் பிரசாரங்கள் தீவிரமாக இருந்த கால கட்டத்தில் மதுரையில் உள்ள தமிழறிஞா்களை சந்தித்து சைவ சித்தாந்தம், தமிழ் இலக்கண நூல்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இத்தகைய சிறப்புமிக்க தமிழறிஞரின் நினைவைப் போற்றும் வகையில் தெப்பக்குளம் பகுதியில் அவரது மாா்பளவு சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலையின் முன் அவரையும், அவரது தமிழ்ப் பணியையும் அவமதிப்பது போன்று பயன்படுத்தப்படாத தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அந்தத் தள்ளுவண்டிகளை அகற்ற மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன் வர வேண்டும். மேலும், அங்குள்ள கடைகளில் சேகரமாகும் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் சிலை அருகே கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறத் தூய்மையும், சிலையின் கண்ணியமும் பாதிக்கப்படுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே, இனி வருங்காலங்களில் சிலையின் அருகே குப்பைகள், இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.