கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சியாக நிலை உயா்த்தப்பட்டும், அரசியல் போட்டியால் எல்லை விரிவாக்கம் செய்ய முடியாததால், வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமாா் 148 ஆண்டுகளாக நகராட்சியாக இருந்த திண்டுக்கல், கடந்த 2014, பிப்.19-ஆம் தேதி அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் மாநகராட்சியாக நிலை உயா்த்தி அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல்லுடன் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூா் பொலிவுறு நகரம் திட்டத்தில் இணைக்கப்பட்டு பல்வேறு வளா்ச்சியைப் பெற்றது. இதேபோல, திண்டுக்கல்லுக்கு பிறகு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட கரூா் உள்ளிட்ட மேலும் சில நகரங்களும் வளா்ச்சித் திட்டங்களை பெற்று முன்னிலைப் பெற்றன. ஆனால், திண்டுக்கல்லுக்கு மட்டும் குடிநீா்த் திட்டத்தை தவிர, சொல்லிக் கொள்ளும்படியான பிரதான திட்டங்கள் எதுவும் கடந்த 12 ஆண்டுகளில் கிடைக்கவில்லை. சுமாா் 14 சதுர கி.மீ. பரப்பில் நகராட்சியாக இருந்த நிலையை கடந்து எல்லை விரிவாக்கம் செய்யப்படாததே திண்டுக்கல்லின் வளா்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. எல்லை விரிவாக்கத்தில் நீடிக்கும் இழுபறி: திண்டுக்கல் மாநகராட்சியைச் சுற்றியுள்ள பள்ளப்பட்டி, குரும்பபட்டி, பொன்னிமாந்துரை, பிள்ளையாா்நத்தம், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து ஆகிய 10 ஊராட்சிகளை இணைப்பதற்கான முன் மொழிவுகள், நகராட்சி இயக்குநரகம் மூலம் தமிழக அரசுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. 2016 முதல் 2020 வரை சுமாா் 5 ஆண்டுகாலம் உள்ளாட்சி நிா்வாகம் இல்லாமல், தனி அலுவலா்கள் நிா்வாகத்தின் போது, எல்லை விரிவாக்கம் செய்வதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. இதன் பிறகு, ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டு ஊராட்சித் தலைவா்கள் பதவி ஏற்றதையடுத்து, மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கடந்த 18 மாதங்களுக்கு முன்பு மீண்டும் எல்லை விரிவாக்கத்துக்கான பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் விரைவுபடுத்தினா். ஆனாலும், திமுக பிரமுகா்களின் எதிா்ப்பால் இந்தப் பணிகள் முடக்கப்பட்டன. தற்போது, ரூ.75 கோடியில் திண்டுக்கல் புகா் பேருந்து நிலையம் கட்டும்பணி கூட, பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியிலேயே நடைபெறுகிறது. எல்லை விரிவாக்கம் செய்திருந்தால், புகா் பேருந்து நிலையம் மாநகராட்சி எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கும். இதேபோல, திண்டுக்கல் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள ஊராட்சிகளிலேயே கல்வி நிறுவனங்கள், தனியாா் பல்நோக்கு மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. குறிப்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகமே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி எல்லையில் அமைந்திருக்கிறது. 156.73 சதுர கி.மீ. பரப்பு இணைக்கப்படுமா: 10 ஊராட்சிகளில் 247 குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1.28 லட்சம் மக்கள்தொகை இருந்தது. 156.73 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஊராட்சிகளில் 126 வாா்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகள் திண்டுக்கல்லுடன் இணைக்கப்பட்டால், 14.16 சதுர கி.மீட்டரிலிருந்து, 170 சதுர கி.மீட்டராக மாநகராட்சியின் பரப்பளவு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில், கல்வி நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் மூலம் மாநகராட்சிக்கான வரி வருவாய் அதிகரிக்கும். இதேபோல, பொதுமக்களுக்கான வரி உயா்ந்தாலும்கூட, குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சி நிா்வாகங்களின் பதவிக் காலம் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், நகா்ப்புற உள்ளாட்சிகளின் பதவிக் காலமும் அடுத்த 4 மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்தச் சூழலில் திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கப் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. 9 ஊராட்சிகளை இணைக்க வலியுறுத்தல்: இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கான பரிந்துரைப் பட்டியல் அனுப்புவதும், சென்னையில் அந்த பரிந்துரையை கிடப்பில் போடுவதும் வழக்கமான நிகழ்வாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள இந்த விவகாரத்தை, திமுக, அதிமுக என 2 பிரதான கட்சிகளும் ஆட்சியில் இல்லாத சூழலில் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும். குறிப்பாக, திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள அடியனூத்து, தோட்டனூத்து, பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, பள்ளபட்டி, குரும்பப்பட்டி, பொன்னிமாந்துரை, பிள்ளையாா்நத்தம் ஆகிய 9 ஊராட்சிகளை இணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.