12 மாவட்டங்களில் மக்கள்தொகை குறைந்தது! கணக்கெடுப்பில் வெளியான தகவல்

Wait 5 sec.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் முதல்கட்டமாக சேகரிக்கப்பட்ட வீடுகள் குறித்த பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பைவிட 12 மாவட்டங்களில் மக்கள்தொகை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் கணக்கெடுப்பில் குளறுபடியா, தகவல் இடைவெளியா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் முதல்கட்டமாக வீடுகள் குறித்த தகவல் சேகரிக்கும் பணி கடந்த ஆக. 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வீடுகள் பட்டியலைப் பொருத்தவரை, சுய கணக்கெடுப்பு மூலம் பொதுமக்களே தங்களின் விவரங்களை இணையவழியில் எளிதாகப் பதிவேற்றம் செய்வதற்கான பணி கடந்த ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆக.1 முதல் 31-ஆம் தேதி வரை அரசு சார்பில் நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வீடுகள் கணக்கெடுப்பு விவரங்களை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதில் குடும்பத் தலைவர் பெயர், உறுப்பினர்கள் எண்ணிக்கை என இரு வினாக்கள் நீங்கலாக எஞ்சிய 31 வினாக்கள் வீடுகளின் நிலை, பொருள்கள் உள்ளிட்டவை குறித்து இடம் பெற்றிருந்தன. இந்தப் பணியில் மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், 12 மாவட்டங்களில் கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பைவிட தற்போதைய கணக்கெடுப்பில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.நீலகிரி, தேனி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் 14,000 முதல் ஒரு லட்சம் வரை மக்கள்தொகை குறைந்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 4.62 லட்சம் மக்கள்தொகை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.அதேசமயம், திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 8,000 வரை மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 1.25 லட்சம் முதல் 6.25 லட்சம் வரை மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது.மாநில அளவில் உத்தேசிக்கப்பட்ட மக்கள்தொகை பட்டியலின்படி, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எஞ்சிய மாவட்டங்களில் உத்தேசிக்கப்பட்ட மக்கள்தொகையில் 16 லட்சம் பேர் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்துடன் காணொலி மூலம் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விடுபட்ட விவரங்கள் குறித்து மீண்டும் கள ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.அதிகாரிகள் சொல்வது என்ன?: இதுதொடர்பாக அரசுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள்தொகையைவிட, அனைத்து மாவட்டங்களிலும் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்திருக்கும். ஆனாலும், உத்தேசிக்கப்பட்ட மக்கள்தொகை பட்டியலின்படி, 16 லட்சம் குறைந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முதல் கட்டமாக வீடுகளின் எண்ணிக்கை, விவரங்களை மட்டுமே கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. வீடுகள் குறித்த பட்டியலில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டதுதான் பிரச்னைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.ஊரகப் பகுதியில் வசிப்பவர்கள் நகர்ப்புறத்தில் இணைந்திருப்பதாகவும், நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் ஊரகப் பகுதியில் இணைந்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். இதேபோல, வெளியூர்களில் வசிப்பவர்களும் கணக்கெடுப்பில் முறையாக இணையவில்லை. பல இடங்களில் அரசின் நலத் திட்டங்கள் ரத்தாகிவிடும் என்ற அச்சத்தில் உண்மையான விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கவில்லை.இதன் எதிரொலியாகவே வீடுகள் குறித்த தகவல் சேகரிப்பின்போது மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. முதல் கட்டத்தில் வீடுகள் குறித்த கணக்கீடு என அறிவித்துவிட்டு, தற்போது மக்களின் எண்ணிக்கையை ஏன் சரிபார்க்கவில்லை என உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, ஒரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படை ஆதாரம் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றனர்.2-ஆம் கட்ட பதிவில்... வீடுகள் குறித்த பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் எழுந்துள்ள நிலையில், 2-ஆம் கட்டமாக மக்களின் கல்வி, பொருளாதாரம் சார்ந்த கணக்கெடுப்பை துல்லியமாக எடுப்பதற்கான திட்டமிடுதல் தேவை. குறிப்பாக இணையவழியில் சுய பதிவேற்றம் செய்வதில் பல குழப்பங்கள் உள்ளன. அதற்குத் தீர்வு காண்பது அவசியம். கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்துவதோடு, பணி நெருக்கடி இல்லாமலும் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.