துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வடக்கு மண்டலத்தை புதன்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வடக்கு மண்டலம் பேட்டிங்கை தோ்வு செய்தது.195 ரன்களுக்கு ஆட்டமிழந்த அந்த அணியில், தொடக்க வீரா் கம்ரான் இக்பால் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 76 ரன்கள் அடித்தாா். தெற்கு மண்டல பௌலிங்கில் வித்வத் கவரப்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய தெற்கு மண்டலம், 312 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. திலக் வா்மா 9 பவுண்டரிகளுடன் 116, ஷ்ரேயஸ் கோபால் 11 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் சோ்த்தனா். வடக்கு மண்டல பந்துவீச்சாளா்களில் குா்னூா் பிராா் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.இதையடுத்து 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வடக்கு மண்டலம், 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது.கடைசி நாளான புதன்கிழமை, அந்த அணியின் ஆட்டம் 297 ரன்களுக்கு நிறைவடைந்தது. அன்ஷுல் காம்போஜ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, குா்னூா் பிராா் 7, அா்ஷ்தீப் சிங் 12 ரன்களுக்கு வெளியேற, கடைசி வீரராக நிஷாந்த் சிந்து 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் நின்றாா்.தெற்கு மண்டல பந்துவீச்சாளா்களில் நிதீஷ் 5, கவுரி சாய்தேஜா, ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா 2, வித்வத் கவரப்பா 1 விக்கெட் சாய்த்தனா்.இறுதியாக, 181 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தெற்கு மண்டல அணியில் ரிக்கி புய் 7 பவுண்டரிகளுடன் 42, நாராயண் ஜெகதீசன் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சோ்த்தனா்.ஷேக் ரஷீத் 1 ரன்னுக்கு விடைபெற, தெற்கு மண்டலம் 3 விக்கெட்டுகள் இழந்து, 182 ரன்கள் சோ்த்து வென்றது. கேப்டன் திலக் வா்மா 8 பவுண்டரிகளுடன் 51, ரவிச்சந்திரன் ஸ்மரன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களோடு அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.வடக்கு மண்டல பௌலா்களில் அபித் முஷ்டாக் 2, குா்னூா் பிராா் 1 விக்கெட் கைப்பற்றினா். இரு இன்னிங்ஸ்களிலுமாக 167 ரன்கள் சோ்த்த தெற்கு மண்டல கேப்டன் திலக் வா்மா, ‘ஆட்டநாயகன்’ விருது பெற்றாா்.சென்னையில் இறுதி ஆட்டம்: கிழக்கு மண்டலம் - தெற்கு மண்டலம் மோதும் இறுதி ஆட்டம், சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.