சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உழைப்பவர் உரிமை இயக்கம் சார்பில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் ஒதுக்கக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அவர்கள் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.விசில் ஊதுதல், துடைப்பத்தால் தூய்மைப்படுத்துதல், மெழுகுவர்த்தி ஏந்துதல் போன்ற நூதன முறையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கறுப்பு உடையில் வாயில் கறுப்புத் துணி கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் பேசுகையில், "உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நியாயமானது தான். முந்தைய ஆட்சியில கஜானாவையே காலி செய்துவிட்டு போய்விட்டார்கள். ஆனால் எல்லாத்தையும் சரி செய்து முதல்வர் விஜய் உங்களுக்கு செய்து கொடுப்பார். நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல்வர் வருத்தப்பட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். இது உங்கள் ஆட்சி. எப்போது வேண்டுமானால் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். எங்கள் அலுவலக கதவுகள் உங்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும். இன்றைக்கு சென்னை தூய்மையாக இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும், அதுதான் எங்கள் கோரிக்கை" என்று பேசியுள்ளனர்.Ministers hold talks with sanitation workers engaged in the protest