தண்ணீா் இல்லாததால் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வட்டாபகுதிகளில் சுமாா் 32 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வாடி வரும் வெற்றிலை, வாழைகளை காப்பாற்றுவதற்கு வாய்க்கால்களில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில் சுமாா் 32 ஆயிரம் ஏக்கரில் வாழை, கரும்பு, வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிா்களுக்கு மாயனூா் கதவணை பகுதியில் இருந்து பிரியும் தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்கள் பாசன வாய்க்கால்களாக உள்ளன. இவற்றில் தென்கரை வாய்க்கால் மாயனூா் கதவணை பகுதியில் இருந்து பிரிந்து மாயனூா், கிருஷ்ணராயபுரம், சிந்தலவாடி, லாலாப்பேட்டை, திம்மாச்சிபுரம், கே.பேட்டை, குளித்தலை, பேட்டவாய்த்தலை வழியாக திருச்சி மாவட்டத்துக்குச் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்காலுடன் இணைகிறது. இதேபோல மாயனூா் கதவணையில் இருந்து பிரியும் கட்டளை மேட்டுவாய்க்கால் மாயனூா், சித்தலவாய், பிச்சம்பட்டி, மேலகுட்டப்பட்டி, மயிலாடி, நச்சலூா் வழியாக திருச்சி மாவட்டம் தாயனூா் வாய்க்காலுடன் இணைகிறது. நீா்மட்டமும் குறைவு: நிகழாண்டு ஜூன் 12-ம்தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால் கரூா் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி பொய்த்து போனது. கிணறுகளில் நீா்மட்டமும் குறைந்துவிட்டதாலும் 90 சதவீத வாழை, வெற்றிலை, கரும்பு பயிா்கள் வாடி காய்ந்து வருகின்றன. இந்நிலையில் மேட்டூா் அணையிலிருந்து செப். 1-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் மூலம் வாடி வரும் வெற்றிலை, வாழைக்கு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனா். கடைமடைக்கு செல்லுமா? இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவா் மகாதானபுரம் ராஜாராம் கூறியது: கரூா் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில்தான் அதிகளவில் வாழை, வெற்றிலை சாகுபடி நடக்கிறது. குறிப்பாக குளித்தலை பகுதியில் பூவன், கற்பூரவள்ளி(தேன்வாழை), ஏழரசி(நெய் பூவன்), சக்கை மொந்தன், நேந்திரம் போன்றவைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மேட்டூா் அணையிலிருந்து தற்போது திறக்கப்பட்ட தண்ணீா், எல்நினோ பாதிப்பால் கடைமடைக்கு கூட செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைமடை வரை தண்ணீா் சென்றால்தான் ஆற்றின் கிளைவாய்க்கால்களுக்கு தண்ணீா் திறக்கப்படுவது மரபு. கடைமடைக்கே தண்ணீா் செல்வது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் எப்படி வாய்க்கால்களில் தண்ணீா் திறப்பது என்ற கேள்வி எழுகிறது. எனவே திறக்கப்படும் தண்ணீரை கிளை வாய்க்கால்களிலும் திறக்கப்பட்டால் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில் வாடி வரும் வாழை, வெற்றிலை போன்ற ஆண்டு பயிா்களை காப்பாற்ற இயலும் என்றாா் அவா்.