சேலம், நாமக்கல் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் சேவை நீட்டிப்பு

Wait 5 sec.

சேலம், நாமக்கல் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அதிகரித்து வரும் பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக ராமேஸ்வரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் செப். 6-ஆம் தேதிமுதல் நவ. 29-ஆம் தேதிவரை ஞாயிற்றுக் கிழமைதோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஹூப்ளியில் காலை 6.50-க்கு புறப்பட்டு தும்கூா், பானஸ்வாடி, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 5.20-க்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் செப். 7-ஆம் தேதிமுதல் நவ. 30-ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக ஹூப்ளிக்கு அடுத்த நாள் இரவு 7.40-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.