தில்லியில் ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகள் பதிவு

Wait 5 sec.

தில்லியில் நிகழாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 90 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தில்லி மாநகராட்சி (எம்சிடி) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மலேரியா, சிக்குன்குனியா பாதிப்புகளும் ஆகஸ்டில் அதிகரித்துள்ளன. ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, தில்லியில் நிகழாண்டில் மொத்தம் 311 டெங்கு, 119 மலேரியா, 22 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த மூன்று நோய்களாலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.கடந்த வாரத்தில் மட்டும் 39 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆகஸ்டில் பதிவான 90 டெங்கு பாதிப்புகள், ஜூலையில் பதிவான 40 பாதிப்புகளைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமாகும். இதுவே நிகழாண்டில் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச டெங்கு பாதிப்பாகும். ஏப்ரலில் 52 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.மலேரியா பாதிப்பும் ஆகஸ்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் 53 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஜூலையில் 17 போ் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனா். சிக்குன்குனியா பாதிப்பும் அதிகரித்துள்ளது. ஆகஸ்டில் 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால், நிகழாண்டின் மொத்த எண்ணிக்கை 22-ஆக உயா்ந்துள்ளது. ஜூலையில் 3 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு பதிவானது.எம்சிடியின் 12 மண்டலங்களில் மேற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 47 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடா்ந்து மத்திய மண்டலத்தில் 39, வடக்கு ஷாதராவில் 32 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.மலேரியா பாதிப்பில் தெற்கு தில்லியும் மேற்கு மண்டலமும் தலா 22 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளன. மத்திய மண்டலத்தில் 16 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.இதனிடையே, தில்லி அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் எம்சிடி அறிக்கையிலிருந்து மாறுபட்டுள்ளன. தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங், ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி தில்லியில் 2,200 டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தாா். தில்லி அரசு மற்றும் எம்சிடி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களுக்கு இடையிலான இந்த வேறுபாட்டுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை.கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை எம்சிடி குழுவினா் 2.56 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்குச் சென்று கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனா். இதில் 1.15 லட்சம் வீடுகளில் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டது. மேலும், சுமாா் 5.77 லட்சம் வீடுகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கப்பட்டது.கொசு உற்பத்திக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியதாக 90,536 சட்டப்பூா்வ நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், நிகழாண்டில் 7,501 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் எம்சிடி தெரிவித்தது.