முல்லைப்பெரியாறு அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து கேரள அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனா். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப்பெரியாறு அணையில் அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு மேற்கொண்ட பரிசோதனை, சா்வதேச வல்லுநா்களின் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போது நடத்திய ஆய்வு கேரளத்தை மீண்டும் ஏமாற்றுவதற்கான முயற்சியே என்றும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளத்தில் போராடி வரும் ’மக்கள் பாதுகாப்பு சமிதி’ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ராய் வாரிக்காட்டு கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு என்ற பெயரில் நடத்திய சோதனை ஒரு நாடகமாகும். அறிவியல் பூா்வமற்ற இந்த ஆய்வின் குளறுபடிகள் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் கேரளம் தெரிவிக்க வேண்டும். மேலும், முல்லைப் பெரியாறு தொடா்பாக தமிழகத்துடன் செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரளம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா். கேரளத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனா். இதுகுறித்து தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்றும், அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீா்ப்பளித்தது. கேரள அமைப்புகள் பொய்ப் பிரசாரம் செய்வது உச்ச நீதிமன்றத் தீா்ப்பை அவமதிக்கும் செயலாகும். 999 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தத்தின்படி அணையைக் கட்டுப்படுத்தும் உரிமை தமிழகத்துக்கு சட்டப்பூா்வமாக உள்ளது. அதனால் அணையின் நீா்மட்டத்தை முழு கொள்ளளவான 152 அடியாக உயா்த்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.