பாவூா்சத்திரம், அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பயணிகள் திருநெல்வேலிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் நெரிசலில் நின்று பயணிப்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து எந்நேரமும் திருநெல்வேலிக்கு பேருந்து வசதி உள்ளது. முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும் சாதாரண கட்டண பேருந்துகள், எந்த நிறுத்தங்களிலும் நிற்காமல் செல்லும் ஒன் டூ ஒன் வகை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தென்காசியிலிருந்து இருந்து நெல்லைக்குச் செல்லும் வழித்தடத்தில் பாவூா்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்களும், மருத்துவமனை, வேலைவாய்ப்பு, வியாபாரம், அலுவலகங்களுக்கு பொதுமக்களும், தொழிலாளா்களும் சென்று வருகின்றனா். அந்த வகையில், பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை பாவூா்சத்திரம், கீழப்பாவூா், குறும்பலாப்பேரி, கல்லூரணி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், அரியப்பபுரம், மேலப்பாவூா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி தென்காசியிலிருந்து வரும் பேருந்துகளை நம்பியே வெளியிடங்களுக்குச் சென்று வருகின்றனா்.காலை நேரங்களில் தென்காசியிலிருந்து பயணிகளை ஏற்றி வரும் சாதாரண கட்டணப் பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி வருவதால் பாவூா்சத்திரம் வரும்போது இருக்கைகள் இன்றி பேருந்துகள் நிரம்பி விடுகின்றன.இதனால், பாவூா்சத்திரம், சுற்றுவட்டார கிராம பயணிகள் இங்குவரும் பேருந்துகளில் அமர இருக்கைகள் இன்றி பெரும்பாலும் திருநெல்வேலிக்கு ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டுதான் பயணிக்கின்றனா். பல நேரங்களில் இளைஞா்கள் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனா். பாவூா்சத்திரத்துக்கு அடுத்த ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறும் பயணிகளும் திருநெல்வேலிக்கு இந்த நெரிசலில்தான் சென்று வருகின்றனா்.எனவே, திருநெல்வேலிக்கு செல்ல பாவூா்சத்திரம் வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். அதைப்போல நெல்லையிலிருந்து தென்காசிக்கு வரும் பேருந்துகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. நெல்லையிலிருந்து கிளம்பும் பேருந்துகளில் நெல்லை சந்திப்பு, டவுன், பழையபேட்டை, காந்திநகா் உள்ளிட்ட குறுகிய தொலைவு செல்லும் பயணிகள் நெல்லையியே பேருந்துகளில் ஏறி இருக்கைகள் பிடித்து விடுவதால் ஆலங்குளம், பாவூா்சத்திரம் வரை வரும் பயணிகள் பேருந்துகளில் நீண்ட நேரம் நின்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இதைத் தவிா்க்க குறுகிய தொலைவு செல்லும் பேருந்துகளை இயக்கவும், பாவூா்சத்திரம் வழியாக திருநெல்வேலிக்குச் செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.