சிங்காநல்லூா், பீளமேடு ஆகிய பகுதிகளில் இருவேறு வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சிங்கநல்லூா் அருகே உள்ள அலமேலு நகரைச் சோ்ந்தவா் ராமராஜ் (68). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரும் தனது மகளும் திண்டுக்கல்லில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றாா். அப்போது, வீட்டின் சாவியை வேலைக்காரப் பெண் லட்சுமியிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளாா். லட்சுமி தினமும் ராமராஜ் வீட்டுக்குச் சென்று நாய்களுக்கு உணவு வைத்து வந்தாா். இந்த நிலையில் ராமராஜின் வீட்டில் அடையாளம் தெரியாத நபா்கள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்து முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா். மறுநாள் லட்சுமி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு ராமராஜுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வந்து பாா்த்தபோது, தங்க நகைகள் மற்றும் பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சிங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.இதேபோல, கோவை சேரன் மாநகா் செங்காளியப்பன் நகரைச் சோ்ந்த ஆகாஷ் காா்த்திக் (32). இவா் தனது மனைவியுடன் வெளியூரில் வசிக்கும் அவரது சகோதரி வீட்டுக்கு புதன்கிழமை சென்றுள்ளாா். பின்னா் வியாழக்கிழமை அவா் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 கிராம் தங்கம் மற்றும் ரூ.1.25 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.