சேலத்தில் கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி! காட்டிக் கொடுத்தது எது?

Wait 5 sec.

சேலத்தில், தன்னுடைய கணவர் காரில் வரும்போது, வழிப்பறி கும்பல் வெட்டிக்கொன்றதாக மனைவி நடத்திய கொடூர நாடகம் அம்பலமாகியிருக்கிறது.சேலம் மாவட்டம் ஓமலூர் – சங்ககிரி சாலையில், காரில் ரத்த வெள்ளத்தில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி பிணமாக கிடந்த காட்சி அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரை மறித்த 3 பேர் கொண்ட கும்பல் கணவரைக் கொன்று, 12 பவுன் நகையைப் பறித்து சென்றுவிட்டனர் என பூபதியின் மனைவி சுஜிதாஸ்ரீ கதறி அழுதார். இதனைப் பார்த்தவர்கள் மனம் கலங்கியது.ஆனால், பூபதியின் குடும்பத்தினர் தெரிவித்த சந்தேகத்தின் பேரில் விசாரணையைத் தொடங்கிய ஓமலூர் போலீஸார், சுஜிதாஸ்ரீயின் கண்ணீருக்குப் பின்னால் மறைந்திருந்த அந்த அதிர்ச்சி உண்மையை கண்டுபிடித்தனர்.சொத்துப் பிரச்னையில் அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவரின் கொடுமை மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.தான் திட்டமிட்டபடி, சுஜிதாஸ்ரீ, நள்ளிரவில் கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் தனது 13 வயது மகனுடன் சேர்ந்து, கணவன் பூபதியை வீட்டிலேயே கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர், உடலை காரில் ஏற்றிச் சென்று வழிப்பறி கும்பல் கொன்றதாக சினிமா பாணியில் கதையளந்தது விசாரணையில் அம்பலமானது.இதையடுத்து சுஜிதாஸ்ரீ, கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சுஜிதாஸ்ரீ சேலம் மத்திய மகளிர் சிறையிலும், சந்தோஷ்ராஜ் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்; சிறுவன் சேலம் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். கொள்ளைச் சம்பவம் என்று சேலத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், அது கொடூர கொலைச் சம்பவம் என மாறியது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.