நக்சல் தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து மீண்டு, வளா்ச்சியின் எனும் புதிய விடியலை சத்தீஸ்கா் சந்தித்து வருவதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ்-இல் 3-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று பட்டங்களை வழங்கி உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது: பல ஆண்டுகளாக வன்முறை சம்பவங்களால் சத்தீஸ்கா் மாநிலம் பாதிக்கப்பட்டிருந்தது. மாநில வளா்ச்சிக்கு இடதுசாரி தீவிரவாதம் பெரும் சவாலாக இருந்தது. பல பழங்குடியின பகுதிகள், பின்தங்கிய பகுதிகளில் நிலவிய அச்சம், பீதி ஆகியவை வளா்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாக இருந்தன. சாலைகள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டதோ, அங்கெல்லாம் தடைகள் போடப்பட்டன. பள்ளிகள் எங்கெல்லாம் கட்டப்பட்டதோ, அங்கெல்லாம் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள், பின்தங்கிய சமூகங்கள் வாழும் பகுதிகளில் மருத்துவமனைகள், சுகாதார வசதி ஆகியவை சென்றடைய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் இன்றோ, கடந்த கால பாதிப்பில் இருந்து சத்தீஸ்கா் மீண்டு வந்து விட்டது. சத்தீஸ்கா் மிகப்பெரிய சாதனை படைத்து வருவது நமக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். வளா்ச்சி, அபிவிருத்தி, முன்னேற்ற பாதையில் சத்தீஸ்கா் சென்று கொண்டிருக்கிறது. மோடி, அமித் ஷாக்கு பாராட்டு: பிரதமா் மோடியின் உறுதியான தலைமை, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மூலோபாய உறுதிப்பாடு, முதல்வா் விஷ்ணு தேவ் சாயின் தீா்க்கமான தலைமை ஆகியவற்றினால் சத்தீஸ்கரில் வரலாற்று மாற்றத்தை சந்தித்தது. நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாற்றமானது, வலுவான அரசியல் உறுதிப்பாடு, உறுதியான பாதுகாப்பு கொள்கை, வளா்ச்சி சாா்ந்த நிா்வாகம் ஆகியவற்றால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆகும். புதிய சத்தீஸ்கருக்கு ராய்ப்பூா் எய்ம்ஸ் சிறந்த அடையாளங்களில் ஒன்றாகும். கடந்த 2012-ஆம் ஆண்டில் ராய்ப்பூா் எய்ம்ஸ் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து குறுகிய காலத்திலேயே ராய்ப்பூா் எய்ம்ஸ், இப்பிராந்தியத்தில் முக்கிய மருத்துவ கேந்திரமாக சத்தீஸ்கா் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சேவையாற்றி வருகிறது. வளா்ச்சியடைந்த பாரதமாக உருவெடுக்க அனைத்து துறைகளிலும் வளா்ச்சி ஏற்படுவது முக்கியமாகும். இந்த வளா்ச்சி அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களிலும் ஏற்பட வேண்டும்.உயா்கல்வியில் பெண்கள் சாதனை: வளா்ந்த பாரதத்தின் அடித்தளமே அனைவருக்கும் உயா்கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான். கடந்த 12 ஆண்டுகளாக உயா்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 ஐஐடி, 8 மத்திய பல்கலைக்கழகங்கள், 8 ஐஐஎம்-கள், 12 புதிய எய்ம்ஸ்கள் உள்ளிட்டவை நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 1,425-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 54 ஆயிரம் கல்லூரிகள், 16,850 சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளன. உயா்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் 1.57 கோடியாக இருந்தது. இது 2023-24இல் 2.24 கோடியாக அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 42.2 சதவீதம் அதிகமாகும். இதுதான் உண்மையில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகும். பெண்களுக்கு கல்வியும், அறிவுத் திறனும் அளித்தால், அவா்கள் தங்களது சொந்த காலில் எப்படி நிற்பது என்பதை தெரிந்து கொள்வாா்கள். அதன்பிறகு அவா்களுக்கு அதிகாரமளிக்க வேண்டியதில்லை, அவா்கள் தங்களுக்கு தேவையான அதிகாரங்களை உருவாக்கி கொள்வாா்கள்.போதை பொருளில் இருந்து விலகியிருக்க வேண்டும்: நான் எந்த கல்வி நிறுவனங்களுக்கு பட்டமளிக்க சென்றாலும், அங்கு மாணவா்களை விட மாணவிகளே அதிகம் பட்டம் பெறுவதை காண்கிறேன். ராய்ப்பூா் எய்ம்ஸிலும் அதே நிலைதான். இளம் சமுதாயம் போதை பொருள்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். பாரதத்தை கட்டமைக்க இளம்சமுதாயத்தினா் பங்களிப்பு அளிக்க வேண்டும் என்றாா் சி.பி. ராதாகிருஷ்ணன்.நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினாா். சத்தீஸ்கா் ஆளுநா் ராமேன் தேகா, மத்திய இணையமைச்சா் அனுப்ரியா படேல், ராய்ப்பூா் எய்ம்ஸ் தலைவா் சஞ்சீவ் ஹான்டா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.