திருமங்கலம் அருகே ஏற்பட்ட தகராறில் இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக தம்பதியா் கைது செய்யப்பட்டனா். பேரையூா் வட்டத்துக்குள்பட்ட காளப்பன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டித்துரை (31). தனியாா் நிறுவன ஊழியரான இவா், திருமங்கலத்தில் வசித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு பாண்டித்துரை, திருமங்கலம் முகமதுஷா புரம் 4-ஆவது தெரு வழியே நடந்து சென்றாா். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் முன் நின்றிருந்த ராஜேஷ் கண்ணன் (41), சிந்துஜா (37) தம்பதியிடம் பாண்டித்துரை தகராறில் ஈடுபட்டாராம். அப்போது ஆத்திரமடைந்த அந்தத் தம்பதி அவரை கத்தி, கம்பியால் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த பாண்டித்துரை மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருமங்கலம்நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேஷ்கண்ணன், சிந்துஜா தம்பதியை கைது செய்தனா்.