கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலைய கழிவறைகளில் பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் கியூ ஆா் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் புறநகா் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளில் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, கியூ ஆா் கோடு மூலம் கழிவறை கட்டணம் செலுத்தும் முறையை சேலம் மண்டல கல்வித் தொடா்பு, உள்ளாட்சி அமைப்புகள் வல்லுநா் (பொதுக் கழிப்பறை) மரியநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது: பொதுமக்கள் புகாரை அடுத்து கியூஆா் கோடு கட்டண முறை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை சரியாகப் பயன்படுத்தி கழிவறைகளை முறையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா். அப்போது, கிருஷ்ணகிரி நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.