தில்லி லோக் ஆயுக்தா நீதிபதி (ஓய்வுபெற்ற) ஹரிஷ் சந்திர மிஸ்ரா வியாழக்கிழமை காலை தனது 67-ஆவது வயதில் காலமானாா் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மிஸ்ரா தனது இல்லத்தில் காலமானாா். அவரது உடல் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் லோக் ஆயுக்தா அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா். ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான மிஸ்ரா, 2022 மாா்ச் மாதம் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட்டாா். அவா் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளாா். தில்லி முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிஸ்ராவின் மறைவு குறித்து ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளாா். அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் அளிக்க இறைவனைப் பிராா்த்திப்பதாகவும் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.