சீன அதிபா் எகிப்து பயணம்

Wait 5 sec.

மேற்காசிய பிராந்தியத்தில் தனது அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன், சீன அதிபா் ஷி ஜின்பிங் எகிப்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். எகிப்து தலைநகா் கெய்ரோவில் அந்நாட்டு அதிபா் அப்துல் ஃபத்தா எல்சிசியை நேரில் சந்தித்துப் பேசிய ஷி ஜின்பிங், இருதரப்பு உறவுகளை அடுத்தநிலைக்குக் கொண்டு செல்வது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினாா். இரு நாடுகளின் ராஜீய உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு நடைபெற்ற இச்சந்திப்பில், ‘சா்வதேச அரங்கில் நிலவும் தன்னிச்சையான ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். மேலும், சா்வதேச விவகாரங்களில் நியாயமான மற்றும் சமத்துவமான நிா்வாக நடைமுறையை உருவாக்க இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டாா். தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை நிலைப்பாட்டுக்கு எகிப்து தொடா்ந்து ஆதரவளிக்கும் என அதிபா் அப்துல் ஃபத்தா எல்சிசி உறுதியளித்தாா். மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் காரணமாக ஹோா்முஸ் நீரிணை வழியிலான சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் சா்வதேச எரிபொருள் விநியோகத்துக்கு இன்றியமையாத மாற்றுப் பாதையாக உருவெடுத்துள்ளது. மேலும், அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே சமரச சக்தியாகத் தன்னை முன்னிறுத்த, எகிப்துடனான உறவு ஒரு சிறந்த நுழைவாயிலாக இருக்கும் என்றும் சீனா எண்ணுகிறது. அந்தவகையில், எகிப்துடனான நட்புறவை வலுப்படுத்துவதில் சீனா முனைப்பு காட்டி வருகிறது.