காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, காலநிலை தொடர்பான பேரிடர் இழப்பீடு கோரப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால், தனது அண்டை நாடான இந்தியா உள்பட எந்தவொரு நாடுகளிடம் இருந்தும் நேபாளம் நேரடியாக எந்தவித நிதி இழப்பீடும் கோரவில்லை என விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளியிடும் சீனா, அமெரிக்கா, இந்தியாவிடம் நேபாளம் இழப்பீடு கோரியதாக வெளியான தகவலை மறுத்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால், "நானோ அல்லது வெளியுறவு அமைச்சகமோ அல்லது நேபாள அரசோ, தனது அண்டை நாடான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாடுகளிடம் இருந்து நேரடியாக எந்தவித இழப்பீடும் கோரவோ அல்லது கேட்கவோ இல்லை" என்று கனால் கூறினார். இந்த பேரிடரை காலநிலை மாற்றம் மற்றும் அதனால் நேபாளத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ற கண்ணோட்டத்தில் உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.இமயமலைப் பிராந்தியத்தின் பொதுவான சூழலியல் புவியியல் தன்மையைச் சுட்டிக்காட்டிய கனால், ராஜதந்திர மோதல்களைத் தவிர்த்து கூட்டு ஒத்துழைப்பு மற்றும் தயார்நிலையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.இந்தியா, சீனா மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளும் ஒரே மாதிரியான இமயமலை சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளன, அவற்றை எதிர்கொள்கின்றன. இமயமலையில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ள தங்களுக்குள் கூட்டு ஒத்துழைப்பும், தயார்நிலையும் அவசியம் என்பது எங்கள் கோரிக்கை; அதேவேளையில், உலக நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக, இந்த பேரிடரை ஒருமுறை நிகழும் நிகழ்வாகவோ அல்லது ஒருமுறை வழங்கப்படும் உதவியாகவோ மட்டும் பார்க்காமல், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். நேபாளம் போன்ற சிறிய நாடுகளுக்கு ஆதரவளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று அவர் கூறினார்.பேரிடம் பெருவெள்ளத்தை அடுத்து, இந்தியாவின் உடனடி நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு மிகுந்த நன்றி தெரிவித்த கனால், இமயமலை சார்ந்த பொதுவான காலநிலை சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த பிராந்திய ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தினார்.மேலும், எங்களுடைய நாகரிகம், பாரம்பரியம், கலாசாரம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை காப்பாற்றுவதற்கு ஒத்துழைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.பேரிடர் பெருவெள்ள நெருக்கடியின் போது நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியை வழங்கிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்; இந்தியா அவசர மீட்புக் கருவிகள், உடனடி பாலம் அமைப்பதற்கான உபகரணங்கள், நீரை வெளியேற்றும் பம்புகள் மற்றும் டன் கணக்கிலான அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை மூலம் அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், பேரிடர் நிகழ்ந்த உடனேயே, இந்திய அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் அனைத்து வகையான உதவிகளையும் வழங்கியதோடு, நேபாள அரசுக்குத் தேவைப்படும் எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு, மருத்துவப் பொருள்கள், மின்உற்பத்தி இயந்திரங்கள், சூரியசக்தி விளக்குகள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல டன்கள் எடையுள்ள நிவாரணப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கான விமானச் சேவைகளையும் இந்தியா வழங்கியது.மேலும், சிறப்பு உபகரணங்களுடன் கூடிய 11 பேர் கொண்ட மீட்புக் குழு மற்றும் தடயவியல் சார்ந்த உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளதாகவும், புதிய தேவைகள் எழும்போதெல்லாம் இரு நாடுகளும் இது குறித்துத் தொடர்புகொண்டு வருவதாகவும் கனால் தெரிவித்தார்.தேவைக்கேற்ப நாங்கள் தொடர்புகொண்டு வருகிறோம்; எங்கள் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளித்துள்ளது. எனவே, எதிர்காலத்திலும் புதிய தேவைகள் ஏற்படும்போது நாங்கள் தொடர்புகொள்வோம், அவர்களும் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர் என்று அவர் கூறினார். சீனா, அமெரிக்கா, இந்தியாவிடம் இழப்பீடுசமீபத்தில் நேபாள தொலைக்காட்சிக்கு சிசிா் கனால் அளித்த பேட்டியில், தான் உருவாக்காத உலகளாவிய பிரச்னைக்கு தற்போது மிகப் பெரிய விலையை நேபாளம் அளித்து வருகிறது. பனிப்பாறைகள் வேகமாக உருகுதல், மலைப்பகுதிகளில் இருந்து பாறைகள் சரிந்து திடீரென ஏற்படும் வெள்ளம் உள்ளிட்டவை உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளாகும்.நேபாளத்தின் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் மிக மிகக் குறைவாகவே உள்ளபோதிலும், மிகக் கடுமையான பாதிப்புகளை எதிா்கொண்டு வருகிறது.உலகில் பசுமைக்குடில் வாயுவை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளாக சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை உள்ளன. அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டிய வரலாற்று கடமை அந்த நாடுகளுக்கு உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெறுவது தொடா்பாக, சா்வதேச அளவில் தனது கூட்டாளி நாடுகளுக்கு நேபாள நிதியமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்தியாவிடம் நேபாளம் இழப்பீடு கேட்பதாக ஊடகங்களில் தகவல்கள் வைரலானது. Clarifying reports regarding climate-related disaster claims following catastrophic flash floods in Nepalநேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!