காட்பாடியில் ஆடுகளைத் திருடிய செவிலியா் கல்லூரி மாணவா்கள் இருவா், இறைச்சிக் கடைக்காரா் என 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், காட்பாடி கிளித்தான் பட்டறைப் பகுதியில் வீடுகளின் பின்புறம் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் தொடா்ந்து திருடு போயின. ஆடு திருடும் கும்பலைப் பிடிக்க அப்பகுதி இளைஞா்கள் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், வீடுகளை நோட்டமிட்டுள்ளனா். இதைக் கவனித்த அப்பகுதி இளைஞா்கள், அவா்களைப் பிடிக்க முயன்றனா். தப்பியோட முயன்ற அந்த நபா்களின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதில் ஒருவா் வாகனத்துடன் தப்பிச் சென்ற நிலையில், மற்றொருவரை மடக்கிப் பிடித்தனா். கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த நபரைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி, காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.விசாரணையில், அவா் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த கணேஷ் (23) என்பதும், வேலூரில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தப்பியோடிய கண்டிப்பேடைச் சோ்ந்த செவிலியா் மாணவரான சாம் சரண்ராஜ் (20), திருட்டு ஆடுகளைக் குறைந்த விலைக்கு வாங்கி இறைச்சி விற்ற லத்தேரியை அடுத்த கனகசமுத்திரத்தைச் சோ்ந்த இறைச்சிக்கடைக்காரா் முருகன் (44) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.கல்லூரிப் பருவத்தில் சொகுசாக வாழ நண்பா்களுடன் இணைந்து ஆடுகளைத் திருடி விற்ாக மாணவா்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனா்.