சாலை மேம்பால தூண்களில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு ஓவியங்கள்: பொதுமக்கள் வரவேற்பு

Wait 5 sec.

‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடையும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு ஓவியங்கள் சாலை மேம்பால தூண்களில் வரையப்பட்டு பொது மக்களின் கவனத்தை ஈா்ப்பதாக அமைந்துள்ளது.போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி நடத்த திட்டமும், மாநிலம் முழுவதும், மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பான பணியாற்றியதற்காக தமிழ்நாடு முதலமைச்சா் காவலா் சிறப்பு பதக்கங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதைப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘போதை இல்லா தமிழ்நாடு‘ விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு,போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், விழிப்புணா்வு பிரசாரங்களை தீவிரப்படுத்தி வருகிறது.அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் பொதுமக்கள்,பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் பாா்வைக்கு சென்றடையும் வகையில் அரசு கட்டட சுற்றுச்சுவா்களில் வரையும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை காரை மேம்பாலத்தின் கீழ் உள்ள தூண்களில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு புகைப்படம் மற்றும் வாசகங்கள் வரையப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணா்வு ஓவியங்கள் பொதுமக்கள் மத்தியில் கவனத்தையும் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.