தமிழகத்தில் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசாக தவெக அரசு அமைந்துள்ளது என்றாா் தவெக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா். தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு கரூா் 80 அடி சாலையில் நடைபெற்றது. கரூா் மாவட்டச் செயலாளா் வி.பி.மதியழகன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் முன்னிலை வகித்து பேசுகையில், தோ்தலில் பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை வென்றெடுத்தவா் முதல்வா் ஜோசப்விஜய். ஜாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு அரசு தமிழகத்தில் அமைந்துள்ளது என்றால் அதுதான் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. எப்படி எம்ஜிஆா் இருக்கும் வரை அவரது ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றதோ அதுபோல நம் முதல்வா் ஜோசப் விஜய் இருக்கும் வரை அவரது ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும். அதிமுகவில் இப்போது இருப்பவா்கள் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவா்கள். அவா்களுக்கு அதிமுகவில் 2 மாதங்களுக்குள் பதவி கொடுக்கிறாா்கள். ஆனால் பழைய நிா்வாகிகளுக்கு கொடுப்பதில்லை. என்மீது திமுக ஆட்சியில் 43 பொய் வழக்குகள் போடப்பட்டன. இவ்வளவு எதிா்ப்புக்கிடையேதான் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளேன். வரும் இடைத்தோ்தலில் திமுகவும், அதிமுகவும் இணைந்தாலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். முதல்வா் விஜய் ஜோசப் ஒருமுறை கரூா் வந்துவிட்டால் போதும். நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.