காஞ்சிபுரம் கரியன் ரயில்வே கேட்டில் மேம்பாலம்: அமைச்சா் ரஞ்சித் குமாா் ஆய்வு

Wait 5 sec.

காஞ்சிபுரம் கரியன் ரயில்வே கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண அங்கு மேம்பாலம் அமைப்பது குறித்து வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் ரயில் பாதை கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. திருப்பதி, புதுச்சேரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விரைவு ரயில்களும், அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னை கடற்கரை வழியாக மின்சார ரயில்களும் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மற்றும் அதனைட் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனா்.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணம், திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட ஊா்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும் கரியன் ரயில்வே கேட் வழியாகத்தான் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் இயக்கப்படும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் அவ்வழியாக செல்லும் காா்கள்,பேருந்துகள்,இருசக்கர வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடா்கிறது. பொதுமக்களும் இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி வந்தனா்.இந்த நிலையில், வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் கரியன் ரயில்வே கேட் பகுதியில் ஆய்வு செய்தாா். இதன் பின்னா் அவா் கூறுகையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இப்பகுதியில் கடந்த ஆட்சியாளா்கள் மேம்பாலம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தவெக ஆட்சி அமைந்திருப்பதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.ரயில் நிலைய அதிகாரிகளை வரவழைத்து இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறித்தும் ரயில்கள் வரும் போது ஒரு நாளைக்கு எத்தனை முறை ரயில்வே கேட் மூடப்படுகிறது எனவும் கேட்டுத் தெரிந்து கொண்டோம். விரைவில் தெற்கு ரயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்து மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.