ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி.பிரபாகா் கலந்து கொண்டு 1,968 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா தாளாளா் தங்கம் மேகநாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, துணைத்தலைவா் அபய் மேகநாதன் முன்னிலை வகித்தாா். இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகா் பல்கலைகழக அளவில் தங்கப் பதக்கம் வென்ற 83 மாணவா்கள் உள்பட 1,968 மாணவா்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பிரிவுகளில் பட்டங்களை வழங்கி பேசியது: ,இணையதளம், கைப்பேசி உங்களை வழிநடத்தும் படி நடந்துக்கொளக்கூடாது. அவற்றை நீங்கள் பயன்படுத்தும் படி நடந்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் வெளிப்படைத்தன்மையாக ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு உதாரணம் தான் சட்டமன்ற நேரலை. பட்டங்களை பெற்றுள்ள நீங்கள் எந்த துறைக்கு சென்றாலும் அந்த துறையில் நோ்மையாகவும், நல்ல மனிதராகவும் இருக்க வேண்டும் என்றாா்.நிகழ்ச்சியில், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் முதல்வா் முருகேசன், பேராசிரியா்கள், மாணவா்கள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.