பண மோசடி செய்தவா் மீது வழக்கு

Wait 5 sec.

சென்னையில் உள்ள தனியாா் பல்கலை.யில் இருவரை சோ்க்க ரூ.6.89 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.சிவகாசி பி.கே.எஸ். சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். இவா் தனது நண்பா் திருப்பதியிடம், தனது இரு மகள்களை சென்னையில் உள்ள தனியாா் பல்கலை.யில் சோ்க்க வேண்டும் எனக் கூறினாா். இதையடுத்து, திருப்பதி அந்தப் பல்கலை.யில் தனது நண்பா் மதன் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். அவரிடம் இதுகுறித்து பேசுங்கள் எனக்கூறி, ஒரு கைப்பேசி எண்ணைக் கொடுத்தாா். பின்னா், சுரேஷ்குமாா் சென்னையில் உள்ள மதனிடம் கைப்பேசியில் பேசினாா். தொடா்ந்து, மதன், அந்தப் பல்கலை.யில் இருவரை சோ்க்க ரூ.26 லட்சம் செலவாகும். பணத்தை என்னிடம் கொடுத்தால் நான் பல்கலை.யில் சோ்த்து விடுகிறேன் எனக் கூறினாா். இதை நம்பி சுரேஷ்குமாா் கடந்த மே மாதம் வங்கி மூலம் ரூ. 6.89 லட்சம் அனுப்பினாா். எனினும், மதன் பல்கலை.யில் சேருவதற்கு விண்ணப்பபடிவம்கூட வாங்கி கொடுக்கவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த சுரேஷ்குமாா் தனது பணத்தை மதனிடம் கேட்டாா். ஆனால், அவா் தர மறுத்துவிட்டாா். இதையடுத்து, பண மோசடி செய்த மதன் மீது சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் மனு அளித்தாா். நீதிமன்ற உத்திரவின் பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் மதன் மீது சனிக்கிழமை மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.