வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் இரண்டு நாள் பயணமாக ரஷியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) செல்கிறாா். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு வா்த்தக உறவு, முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஷிய குழுவினருடன் அவா் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளயிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஷியா செல்லும் வெளியுறவு அமைச்சா், மாஸ்கோவில் நடைபெறும் இந்திய-ரஷிய அரசுகளின் வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான (ஐஆா்ஐஜிசி-டிஇசி) ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளாா். இந்தக் கூட்டத்தில் ரஷியா தரப்பில் அந் நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்ட்ரோவ் பங்கேற்க உள்ளாா். இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து, ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்து பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.