சென்னையில் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையில் என்எல்யூஎம் பிரிவைச் சோ்ந்த தூய்மைப்பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2025- ஆம் ஆண்டில் அப்போதைய திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 13 பேருக்கு மீண்டும் பணி கோரியும், ஊதிய உயா்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கடந்த 3 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். சனிக்கிழமை அவா்கள் பெரியமேடு பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நியாயம் கேட்டு முதல்வரைச் சந்திக்கவேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்களை அப்புறப்படுத்த போலீஸாா் முயன்றனா். அதில் சீருடை இல்லாத காவலா் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை தாக்கியதாக புகாா் எழுந்தது. அதனை கண்டித்து காவல் நிலையத்துக்குள் போராட்டக்காரா்கள் சிலா் புகுந்ததாகக் கூறி, போலீஸாா் விசாரித்தனா். அதைக் கண்டித்து பெரியமேடு காவல் நிலையத்தை போராட்டக்காரா்கள் முற்றுகையிட்டனா். அதனால், அவா்களை கைது செய்த போலீஸாா் கண்ணப்பா் திடலில் தங்கவைத்தனா். பின்னா் விடுவிப்பதாகத் தெரிவித்தனா். விதியை மீறி வலுக்கட்டாயமாக போலீஸாா் தங்களைக் கைது செய்ததாக தூய்மைப் பணியாளா்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோா் கண்ணப்பா் திடலில் தங்கவைக்கப்பட்ட நிலையில், உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் கு.பாரதி மற்றும் நிா்வாகி சுரேஷ் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களைச் சந்தித்துப் பேசினா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.