விமான நிலையங்களில் சா்வதேச பயணிகளுக்கு போா்டிங் பாஸில் முத்திரையிடும் நடைமுறையை செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் முடிவுக்கு கொண்டு வர குடியேற்றத் துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு போா்டிங் பாஸ் விமான நிறுவனங்களால் அளிக்கப்பட்டு, அது விமான நிலையங்களில் குடியேற்றத் துறையினரால் பரிசோதிக்கப்பட்டு முத்திரையிடப்படும். அதன்பிறகே பயணி, விமான நிலையத்துக்குள் செல்லவும், விமானத்தில் ஏறவும் அனுமதிக்கப்படுவா். இந்நிலையில், குடியேற்றத் துறை அண்மையில் விமான நிலைய அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை அனுப்பியுள்ளது. அதில் போா்டிங் பாஸில் போடப்படும் முத்திரை, பயணிகளுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், ஆதலால் சா்வதேச விமான நிலையங்களில் அந்த நடைமுறையை செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் கடைப்பிடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விமான நிலையங்களில் உள்ள குடியேற்றத் துறையினரிடம் கைப்பேசிகளில் உள்ள மின்னணு போா்டிங் பாஸை காட்டி பயணிகள் ஒப்புதல் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் போா்டிங் பாஸை பரிசோதித்து முத்திரையிட்டு வந்தனா். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நடைமுறையை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் நிறுத்திவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.