காங்கோ குடியரசின் வரலாற்றிலேயே மிக வேகமாக தீவிரமடைந்து வரும் எபோலா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அந்நாட்டுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ‘எா்வெபோ’ தடுப்பூசிகள் வந்துள்ளன. உலக சுகாதார அமைப்பு மற்றும் அதன் கூட்டமைப்புகளால் அறிவிக்கப்பட்ட 70,000 தடுப்பூசிகளில், முதல்கட்டமாக இந்த 16,250 தடுப்பூசிகள் தலைநகா் கின்ஷாசாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்தன. தற்போது காங்கோவில் பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ ஏதுமில்லை. இருப்பினும், எபோலாவுக்கு சிகிச்சையளிக்க உரிமம் பெற்ற எா்வெபோ தடுப்பூசி, இந்தத் தீநுண்மிக்கு எதிராகவும் ஓரளவு பாதுகாப்பை அளிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.