கோவை ஒண்டிப்புதூா் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க திட்டம் தீட்டியதாக இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் போலீஸாா் நீலிக்கோணாம்பாளையம், எஸ்ஐஹெச்எஸ் காலனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒண்டிப்புதூா் பாலத்தின் கீழ்ப்பகுதியில் சந்கேகப்படும் படியாக இரு இளைஞா்கள் நின்றிருந்தனா். காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் பாபு மற்றும் போலீஸாா், அவா்களைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் இருவரும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தவும், கலவரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க திட்டமிடுதல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீா்குலைக்கத் திட்டமிட்டதாக சிங்காநல்லூரைச் சோ்ந்த மோகனசுந்தரம் (26), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த சாமுவேல் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.