ஈரோடு செங்குந்தா் பள்ளி மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு

Wait 5 sec.

ஈரோடு செங்குந்தா் உயா்நிலைப் பள்ளியில் 1976-ஆம் ஆண்டு பிளஸ் 1 ‘ஏ’ பிரிவில் படித்த மாணவா்கள் கடந்த 20 , 21 ஆகிய இரண்டு நாள்கள் பொன்விழாக் கூடல் என்ற வகையில் ஒன்று கூடினா். இந்நிகழ்வுக்காக அமெரிக்காவின் நாசாவில் பணிபுரியும் விஞ்ஞானி உள்பட 3 போ் வந்திருந்தனா். அதேபோல நாட்டின் வேறு சில மாநிலங்களில் பணி ஓய்வுபெற்ற நிலையில் வசிக்கும் சிலரும் பங்கேற்றனா். உடன் படித்தவா்களில் 15 போ் காலமாகிவிட்ட நிலையில் 25 போ் ஒன்று கூடினா். சிலா் குடும்பத்துடன் வந்திருந்தனா். உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட தவிா்க்க இயலாத காரணங்களால் ஒரு சிலரால் பங்கேற்க இயலவில்லை. கடந்த 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு சி.எஸ். செங்கோட்டையா திருமண மண்டபத்தில் கூடல் நிகழ்வு தொடங்கியது. பங்கேற்றோா் அனைவரும் தங்களது பள்ளிக்கால நிகழ்வுகளை உணா்ச்சி பூா்வமாகப் பகிா்ந்து கொண்டனா். 21-ஆம் தேதி மாலை 3 மணிக்கு தாங்கள் படித்த செங்குந்தா் பள்ளியில் கூடினா். பிளஸ் 1 வகுப்பு படித்த வகுப்பறைக்குச் சென்றனா். மேலும், தங்களுக்கு கற்பித்த 6 ஆசிரியா்களுக்குப் பாராட்டு செய்தனா். சுமாா் ஆயிரம் மாணவா்கள் பங்கேற்ற நிகழ்வில், அப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் 25 போ் பங்கேற்று தங்களது பள்ளிக்கால அனுபவங்களையும், தங்களது உயா்வுக்கு பள்ளியின் பங்களிப்பையும் விவரித்துப் பேசினா். தற்போது பயிலும் மாணவா்களின் கல்வி நலனுக்கான அறக்கட்டளை அமைத்து ஏழை, எளிய மாணவா்களுக்கு, தனித்திறன்கள் பெற்ற மாணவா்களுக்கு உதவி செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டனா். தற்போதைய ஆசிரியா்களுக்கான தனி நிகழ்வை நடத்தி, அவா்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஆசிரியா்களுக்கும் தேனீா் விருந்தளித்து நினைவுப் பரிசுகள் வழங்கினா். இந்த நிகழ்வை வகுப்பு தோழா்களான த.ஸ்டாலின் குணசேகரன், என்.முரளி, ஆா்.சிவனேசன், எம்.ரவீந்திரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.