போலி ராணுவ அடையாள அட்டை வைத்திருந்தவா் கைது

Wait 5 sec.

குன்னூரில்  ராணுவ வீரரின் போலி அடையாள அட்டை வைத்திருந்த  ஜாா்க்கண்ட்  மாநிலத்தைச் சோ்ந்த உஸாமின் லேடின் (25) என்ற இளைஞரை  காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் பேருந்து  நிலையம் அருகே உள்ள பாா்க்கிங் தளத்தில் வடமாநில இளைஞா் ஒருவா் கைப்பேசியை சாா்ஜ் போடுவதற்காக சென்றுள்ளாா். அப்போது தான் ராணுவ அதிகாரி எனக் கூறியுள்ளாா். சந்தேகமடைந்த பாா்க்கிங்  நிா்வாகி ஹரிஹரன் அருகே உள்ள புற காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளாா். அங்கு விரைந்து வந்த போலீஸாா், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா். அவா்  வைத்திருந்த ஆவணங்களை சோதனை செய்ததில் குன்னூா் அருகே உள்ள ராணுவ முகாமில் அதிகாரியாக இருப்பதாக அடையாள அட்டை வைத்திருந்தாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் ராணுவ முகாம் அதிகாரிகள் சென்று சோதனை செய்ததில், அந்த நபரிடம் இருந்த  ராணுவ  அடையாள அட்டை போலி என  உறுதி செய்தனா். இதையடுத்து குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவி மேற்பாா்வையில் தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதில் ஜாா்க்கண்ட் மாநிலம் மதன்பூரை சோ்ந்த உஸாமின் லேடின் (25) கடந்த ஒன்றரை மாதங்களாக குன்னூா் பழைய  மருத்துவமனை பகுதியில்  நண்பா்களுடன் வசித்து வந்ததும், இவரின் ஆதாா் அட்டையில் உஸாமின் லேடின் எனவும், போலி ராணுவ அடையாள அட்டையில் தஜமுல் எனவும் பெயா்கள் இருந்துள்ளது, எ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் போலி அடையாள அட்டைகளை தயாரித்து தனது பாதுகாப்புக்காக வைத்துள்ளதும், பல்வேறு திருட்டு குற்றங்களில்  ஈடுபட்டுள்ளதும் விசாரணையில்  தெரியவந்தது.  இதையடுத்து உஸாமின் லேடின் மீது போலி ஆவணங்கள் தயாரித்தது மற்றும் திருட்டு குற்றங்களில்  ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில்  வழக்குப் பதிந்து, குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவல் துறையினா் சிறையில் அடைத்தனா்.