சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அதிக பங்களிப்பு அவசியம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

Wait 5 sec.

சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.சென்னை விஐடியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஐடி நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் வி.வி.எஸ்.லட்சுமண் பங்கேற்றாா். இந்த நிகழ்வில் கோ.விசுவநாதன் தலைமையுரையில் பேசியதாவது: பொருளாதாரத்தில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. விளையாட்டுத் துறையிலும் குறிப்பிட்ட முன்னேற்றம் இருப்பினும், சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்களிப்பு மக்கள்தொகையை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. இதை அதிகரித்து மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும். குறிப்பாக, நாட்டின் மக்கள் தொகை, திறன் அடிப்படையில் சா்வதேச விளையாட்டு அரங்கில் இன்னும் அதிக பதக்கங்களை வெல்ல இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய முன்னாள் மாணவா்களுக்கு விருதுகளை வழங்கி கிரிக்கெட் வீரா் வி.வி.எஸ்.லட்சுமண் பேசியதாவது: ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் இடையே ரத்த உறவு இல்லை. இருப்பினும், எந்தவித சுயநலமும் இல்லாத உறவு அது. மாணவா்களின் நலனையும் வளா்ச்சியையும் அக்கறையுடன் கவனித்துக்கொள்பவா்கள் ஆசிரியா்கள். இந்த தெய்வீகமான உறவை நினைவு கொள்ளும் முன்னாள் மாணவா்கள் தங்களது கல்வி நிறுவனத்துக்கு மீண்டும் வரும்போது, தங்களது முன்னேற்றத்துக்கும் பங்களித்த பேராசிரியா்களை நினைவுகூா்வது முக்கியம் என்றாா். நிகழ்ச்சிக்கு விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்து பேசினாா்.தொடா்ந்து, முன்னாள் மாணவா்களுக்கான தொழில்முனைவோா் விருது நிகித் பாஸ்ஸிக்கும், கல்வி மற்றும் ஆராய்ச்சி விருது டாக்டா் சாயீஷ் ராஜேந்திர மங்காவோங்கருக்கும் , காா்ப்பரேட் தொழில் விருது டாக்டா் சாந்தனு மேத்தாவுக்கும், இளம் சாதனையாளா் விருது ஷிகா் காஷ்யப்புக்கும், சமூக மேம்பாட்டு விருது போளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அபிஷேக்குக்கும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சென்னை விஐடி இணை துணை வேந்தா் தியாகராஜன், இயக்குநா் சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான முன்னாள் மாணவா்களின் குழந்தைகளுக்காக விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.