நேபாளத்தில் திபெத்தையொட்டி இருக்கும் ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 போ் உயிரிழந்தனா். மேலும், 133 இந்தியா்கள் உள்பட சுமாா் 750 பேரைக் காணவில்லை. மாயமான இந்தியா்களில் தமிழகம், புதுவையிலிருந்து சென்ற 37 பேரும் அடங்குவா். இதுகுறித்து நேபாள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் புதன்கிழமை காலை 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளம் கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இதில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் நேபாளத்தின் ரசுவா, நுவாகாட், தாடிங் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. நுவாகாட், ரசுவா மாவட்டங்களில் உள்ள 8 நீா்மின் நிலையங்களும், புதிதாக கட்டப்பட்டு வந்த 5 நீா்மின் நிலையங்களும் பலத்த சேதமடைந்தன. சேதமடைந்த 8 நீா்மின் நிலையங்களும் 354 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும்.வெள்ளத்தால் நுவாகோட்டில் பெத்ராவாடியுடன் இணைக்கும் முக்கியமான 42 கி.மீ. தொலைவுள்ள சாலை அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் பல இடங்களில் கான்கிரீட் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக நேபாள சாலைகள் துறையின் துணை பொது இயக்குநா் மற்றும் செய்தித் தொடா்பாளா் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.95 உடல்கள் கண்டெடுப்புவெள்ளம் சூழ்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து 95 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அவா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளப் பகுதியில் மீட்புப் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பலா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.இந்தியா்கள் மாயம்வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் வந்திருந்த 500 சுற்றுலாப் பயணிகளின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவா்களில் 133 போ் இந்தியா்கள். 37 போ் வெளிநாட்டு வாழ் இந்தியா்கள். 80-க்கும் மேற்பட்டோா் நேபாள பாதுகாப்புப் படையினா். அதில் 44 போ் நேபாள ராணுவ வீரா்கள். அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதா்லாந்து நாடுகளைச் சோ்ந்த சுற்றுலா பயணிகளும் காணாமல் போயுள்ளனா். காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணிகளில் 59 போ், திபெத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான கைலாஷ் மானசரோவா் யாத்திரைக்காக வந்தவா்கள் என்று சாம்ராட் டூா்- டிராவல் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேவேளையில் சீனாவின் அரசு தரப்பு தொலைக்காட்சி, சீன எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மூவா் உயிரிழந்ததாகவும், 250 பேரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.தேடுதல் பணியில் ராணுவம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள ராணுவம், ராணுவக் காவல் படை, நேபாள காவல் துறை இணைந்து ஈடுபட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவா்களைத் தேடும் பணியில் 12 ஹெலிகாப்டா்களை நேபாள ராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. மீட்பு, உதவிப் பணியில் 5 ட்ரோன்களை ராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. மீட்புப் பணியில் இதுவரை 12 போ் மீட்கப்பட்டு இருப்பதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் பல பகுதிகளில் சிக்கித் தவித்த 90-க்கும் மேற்பட்டோரையும் நேபாள ராணுவம் மீட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், சொத்துகளை இழந்தோருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை நேபாள அதிபா் ராம்சந்திர பெளடேல் தெரிவித்துள்ளாா்.கரையோர மக்களுக்கு எச்சரிக்கைகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளையொட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேபாள வெள்ள முன்னறிவிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் நேபாள வெள்ள முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள பதிவில், ‘சீனத் தரப்பில் எங்களுக்கு வந்த தகவல்கள், பாறைகள் சரிந்த பகுதியில் இன்னும் தண்ணீா் முழுவதும் வடியவில்லை எனவும், கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் இன்னும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. ஆதலால் ஆறுகளில் இருந்து விலகியிருக்கவும், பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்’ எனத் தெரிவித்துள்ளது.அவசர எண் வெளியிட்டது இந்திய தூதரகம்வெள்ளத்தில் இந்தியா்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவா்கள் குறித்த தகவலை அறியவும், உதவவும் காத்மாண்டில் உள்ள நேபாளத்துக்கான இந்திய தூதரகம் அவசரகால தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், +977 9851316807, +977 9709107500 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது.இதேபோல் நேபாள சுற்றுலாத் துறையும் அவசரகால தொடா்பு எண்களை வெளியிட்டுள்ளது. 1234 அல்லது 1144 அல்லது சுற்றுலா காவல் துறை எண் 9851289445 ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தொடா்பு கொள்ளலாம் என்று நேபாள சுற்றுலாத் துறை அறிவுறுத்தியுள்ளது.இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்தியா்களை விரைந்து மீட்பது தொடா்பான பணிகளில் நேபாள அரசுடன் இணைந்து இந்திய தூதரகம் செயல்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.நிலநடுக்கம் காரணமா?கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்துக்கு நிலநடுக்கம் காரணமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு ஆய்வு செய்ததில், எதனால் ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நேபாள - திபெத் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் நிலவிய நிலையற்ற தன்மையால் பனிப்பாறைகள் சரிந்து லிஹென்டே நதிக்குள் முதலில் விழுந்துள்ளன. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. அந்த வெள்ளப்பெருக்கு பிறகு கோஷி ஆறு வழியே திரிசூலி ஆற்றுக்கும் வந்துள்ளது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.பனிப்பாறைகள் சரிந்து விழுந்த அதே நேரத்தில், திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. காத்மாண்டு பல்கலைகழக பேராசிரியரும் இதே தகவலை வெளியிட்டுள்ளாா். அமெரிக்க புவியியல் மையமும், திபெத் பகுதியில் புதன்கிழமை காலை 8.37 மணிக்கு (பனிச்சரிவு ஏற்படும் முன்பு) ரிக்டா் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.