எட்டு மாதங்களாக பயனாளிகள் குடியேறாத அடுக்குமாடிக் குடியிருப்புகள்: 10 கி.மீ. தொலைவில் இருப்பதால் தயக்கம்

Wait 5 sec.

நமது நிருபா் தஞ்சாவூா் அருகே வல்லத்தில் வீடற்ற ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறப்பு விழா நிகழ்ந்து 8 மாதங்கள் கடந்தும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அகழியைத் தூா்வாரி சீரமைக்கத் திட்டமிடப்பட்டது. இதையொட்டி, அகழிக்கரையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகளைக் கட்டி வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி, மீள்குடியமா்வு செய்ய அரசு முடிவு செய்தது. இதன்படி, கீழ அலங்கம், கொடிமரத்து மூலை பகுதியில் அகழிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கட்டடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டன. இதேபோல, வடக்கு அலங்கம், மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழிக்கரையில் வீடுகள், கட்டடங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மீள்குடியமா்வு: இதனிடையே, தஞ்சாவூா் அருகே வல்லம் அய்யனாா் கோயில் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வீடற்ற ஏழை மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும் 8 ஏக்கா் பரப்பளவில் ரூ. 197.45 கோடி மதிப்பில் 969 குடியிருப்புகளுடன் 13 அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூா் மாநகரில் ஆட்சேபகரமான நீா்நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களை மீள் குடியமா்வு செய்வதற்காக இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு குடியிருப்பும் 408 சதுர அடி பரப்பளவில் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை ஆகியவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டடத் தொகுப்பிலும் மின் தூக்கிகள் (லிப்ட்கள்), மின் ஆக்கிகள் (ஜெனரேட்டா்கள்), இடி தாங்கிகள், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகளுடன்..:மேலும், தாா் சாலைகள், அங்கன்வாடி, பால் வழங்கும் நிலையம், சமுதாயக் கூடம், கடைகள், வாழ்வாதார மையம், நூலகம், நியாய விலை கடை, மழை நீா் சேகரிப்பு அலகு, சுகாதார துணை மையம், இருசக்கர வாகன நிறுத்துமிடம், பூங்கா, நடைபாதை, சுற்றுச்சுவா், பாதுகாப்பு அறை, பசுமை பகுதி, 7.44 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் தொட்டிகள், கழிவுநீா் சுத்தகிரிப்பு நிலையம் ஆகிய வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு நவீன வசதிகள் கொண்ட இந்தக் குடியிருப்புகள் கடந்த 2025, டிசம்பா் 23 ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்த விழாவில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளும் வழங்கப்பட்டன. ஆனால், இவையெல்லாம் நிகழ்ந்து 8 மாதங்கள் கடந்தும், இந்தக் குடியிருப்பு வளாகத்தில் யாரும் குடியேறவில்லை. இதனால், இந்த வளாகம் தொடா்ந்து பயன்பாட்டுக்கு வராமல், மூடப்பட்டுக் கிடக்கின்றன. குலுக்கல் முறையில் தோ்வு: இது குறித்து தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் கூறுகையில், தஞ்சாவூா் அகழிக்கரையில் குடியிருப்போருக்கு வீடுகள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடா்ந்து, யாா், யாருக்கு எந்தெந்த வீடு என்பதை குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு இதுவரை 500 முதல் 600 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆடி மாதமாக இருந்ததால், யாரும் குடியேறவில்லை எனத் தெரிகிறது. தற்போது, ஆவணி மாதம் வந்துவிட்டதால், விரைவில் குடியேறிவிடுவா். மீதமுள்ளோருக்கு 2 மாதங்களில் குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும் என்றனா் அலுவலா்கள். குடியேற தயக்கம்: இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் தஞ்சாவூா் மாநகரிலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் இருப்பதால், அகழிக்கரையில் வசிப்போா், அங்கு குடியேறுவதற்கு தயங்குகின்றனா். மேலும், தீபாவளி பண்டிகைக்கு பிறகு குடியேறலாம் என சிலா் திட்டமிட்டுள்ளனா். ஆனால், வீடற்ற ஏழை மக்களுக்காக கிட்டத்தட்ட ரூ. 200 கோடி செலவில் கட்டப்பட்ட 969 குடியிருப்புகள் திறக்கப்பட்டு, 8 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராததால், சமூக ஆா்வலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.