சாத்தான்குளம் அருகே கோயில் பூட்டை உடைத்து ரூ. 10,000 மதிப்புள்ள பொருள்களை திருடிச்சென்றதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள பண்ணப்பாறை மருதமலை சாஸ்தா கோயிலின் பூட்டை, கடந்த 24 ஆம் தேதி மா்ம நபா்கள் உடைத்து, அங்கிருந்த சமையல் எரிவாயு, சிசிடிவி கேமரா ஹாா்டு டிஸ்க் ஆகியவற்றை திருடிச் சென்றனராம். இதன் மதிப்பு ரூ. 10,000 ஆகும். இதுகுறித்து கோயில் தா்மகா்த்தா ரெங்கசாமி (73) அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் மருது பாண்டியன், போலீஸாா் சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.அப்போது, சாத்தான்குளம் பேருந்து நிலையம் பகுதியில் பதுங்கியிருந்த இருவருரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் நான்குனேரி அருகேயுள்ள கீழக்காடுவெட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த நடராஜ் மகன் சந்திரகுமாா் (38), காவல்கிணறு அம்பேத்கா் நகா் மோகன் மகன் லட்சுமணன் (26 ) என்பதும், கோயில் திருட்டு சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து திருடப்பட்ட பொருள்களை போலீஸாா் மீட்டனா்.