மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை செய்தனா். இதுகுறித்து மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் செல்வமுத்துக்குமரன், முதுநிலை மருத்துவா் செந்தில்குமாா், மருத்துவா் கவீஸ் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கடுமையான கழுத்து வலி காரணமாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 28 வார கா்ப்பிணிப் பெண் ஒருவா் சில மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். ஓராண்டாக கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்ணுக்கு திடீரென நடப்பதில் சிரமமும், மாா்புக்குக் கீழே உணா்வின்மையும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் முதுகுத் தண்டுவட காசநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் முதுகெலும்புகள், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்றாகும். இந்த நோய்த் தொற்று எலும்பை அழித்து, தண்டுவடத்தைப் பாதிக்கும் அபாயம் கொண்டது. இவற்றுக்கு அறுவைச் சிகிச்சை கட்டாயம். இந்த அறுவைச் சிகிச்சை வழக்கமாகச் செய்யப்படுபவை என்றாலும், ஒரு கா்ப்பிணிக்கு இந்த அறுவைச் சிகிச்சையை செய்வது சவாலான ஒன்றாகும். நோயாளியை பல மணி நேரம் குப்புறப்படுத்த நிலையில் வைக்க வேண்டும். தாய்க்கும், குழந்தைக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மிகுந்த கவனமும், சிறப்பு முன்னெச்சரிக்கைகளும் தேவைப்பட்டன. ஸ்கேன் கதிா்வீச்சிலிருந்து கருவைப் பாதுகாக்கும் அதே வேளையில், தண்டுவட அழுத்தத்தைக் குறைத்து சீரமைக்க வேண்டியிருந்தது. இதற்கு நுட்பமான திட்டமிடலும், மகப்பேறு மருத்துவக் குழுவுடன் ஒருங்கிணைப்பும் தேவைப் பட்டது. அனைத்துத் துறை மருத்துவா்களின் ஒத்துழைப்புடன் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தொடா் கண்காணிப்பில் இருந்த அவருக்கு நரம்பு மண்டல செயல்பாடுகள் முன்னேற்றமடைந்து, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தாா். தாயும், குழந்தையும் தற்போது நலமாக உள்ளனா். இந்த அறுவைச் சிகிச்சையின் போது, மயக்கவியல் துறையின் மருத்துவா்கள் மகாராஜன், ராஜேஷ், வெற்றிவேல் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்றனா்.இந்த பேட்டியின் போது மருத்துவ அதிகாரி திலீப் உடனிருந்தாா்.