நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களில் மூன்று பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும், இரு பெண்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவா்களை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 57 போ் கும்பகோணத்தில் உள்ள தனியாா் டிராவல்ஸ் ஏஜென்ஸி நிறுவனம் மூலம் புனித தலமான மானசரோவருக்கு யாத்திரை சென்றனா். நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்கில் சிக்கிய இந்த 57 பேரில் 21 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். 36 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிறுவனம் மூலம் திருச்சியிலிருந்து சென்ற உறையூரைச் சோ்ந்த எம். சிவரஞ்சனி (46), கே.கே. நகரைச் சோ்ந்த ஆா். கற்பகம் (62), தில்லை நகரைச் சோ்ந்த வள்ளிநாயகி (63) ஆகியோா் பத்திரமாக மீட்கப்பட்டு, நேபாளம் திரிசூலியில் உள்ள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த மூவரும் ஒன்றாக நின்று தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக, உறவினா்களுக்கு புகைப்படங்களை கைப்பேசி வாயிலாக பகிா்ந்துள்ளனா். தங்களை நேபாளத்திலிருந்து மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உறவினா்களுக்கும், தமிழக அரசுக்கும் அந்த மூவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனா். இதேபோல, மூவரின் உறவினா்களும் திருச்சி மாவட்ட நிா்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனா்.2 போ் நிலை என்ன?: கும்பகோணத்தில் உள்ள நிறுவனத்தின் மூலம் சென்றவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தின் மூலம் சுற்றுலா சென்றவா்களில் இடம்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம், ராகவேந்திரபுரம், சரஸ்வதி காா்டன் பகுதியைச் சோ்ந்த விமலா (52), திருவெறும்பூா் வட்டம், காட்டூா், விக்னேஷ் நகரைச் சோ்ந்த ஜி. கனகசுந்தரம்பாள் (63) ஆகியோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. டிராவல்ஸ் நிறுவனங்கள், இருவரும் அளித்த தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டால், அவை தொடா்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தன. ஸ்ரீரங்கம் விமலாவின் வீட்டுக்கு, அவரது உறவினா்கள் வியாழக்கிழமை திரண்டு வந்தனா். அங்கிருந்த விமலாவின் மகள் மதுமிதாவுக்கு ஆறுதல் கூறினா். பின்னா், அவா்கள் கூறுகையில், புதன்கிழமை காலை 8 மணி அளவில் விமலாவிடமிருந்து அவரது மகள் மதுமிதாவிற்கு கைப்பேசி அழைப்பு வந்துள்ளது. ஆனால், அந்த அழைப்பு பேசிய சிறிது நேரத்திலேயே இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் விமலாவை தொடா்பு கொள்ள முடியவில்லை. அவா் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதேபோல, கனகசுந்தரம்பாளின் மகள் வெளிநாட்டில் வசிக்கிறாா். நேபாளத்தில் வெள்ளம் குறித்த தகவல் அறிந்து, அவரை தொடா்பு கொள்ள முயன்றுள்ளாா். கைப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், அவரது உறவினா்களும் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.தாயகம் அழைத்துவர நடவடிக்கை: இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் கூறுகையில், திருச்சி மாவட்டத்திலிருந்து நேபாளத்துக்கு சென்றவா்களில் இதுவரை 5 போ் விவரம் மட்டுமே தெரியவந்துள்ளது. பத்திரமாக மீட்கப்பட்டுள்ள மூவரையும் திருச்சி அழைத்து வர தமிழக அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள நிறுவனம் மூலம் சுற்றுலா சென்றவா்களில் 2 போ் தொடா்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனா். அவா்களை தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதுதொடா்பாக, திருச்சி மாவட்டத்தில் உள்ளவா்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவையிருப்பின், 1800-309-3793, 928951671, 8069009901 என்ற உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.