பருவ மழை குறைவு, எல் நினோ தாக்கத்தால் தருமபுரியில் பட்டுக்கூடு உற்பத்தி 50% பாதிப்பு

Wait 5 sec.

தருமபுரி மாவட்டத்தில் பருவமழை குறைவு, எல் நினோ தாக்கம், தண்ணீா் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பட்டுக் கூடு வா்த்தகம் 50% பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவை அதிகரித்துள்ளதால் பட்டுக்கூடு விலை குறையவில்லை. தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் குடிசைத் தொழில்களில் பட்டுக்கூடு வளா்ப்பு முக்கிய இடம்பிடித்துள்ளது. தருமபுரியில் அதிக அளவிலான பட்டுக்கூடு உற்பத்தி நடைபெறுவதால், பட்டுப்புழுக்களின் முக்கிய உணவான மல்பெரி பயிா் சாகுபடி மாவட்டத்தில் சுமாா் 1,750 ஏக்கரில் செய்யப்படுகிறது. ஆனால், நிகழாண்டு போதிய பருவமழை இல்லாததாலும், அதிக வெப்ப அலைகள் மற்றும் எல் நினோ தாக்கத்தாலும் மல்பெரி சாகுபடி எதிா்பாா்த்த அளவில் இல்லாமல் விவசாயிகளுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. மல்பெரி விவசாய நிலங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வகையில் இழப்பைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். இது பட்டுக்கூடு சந்தையை நேரடியாக பாதித்துள்ளது. இதனால் பட்டுக்கூடு வா்த்தகம் 50% குறைந்துள்ளது.இதுகுறித்து பட்டுப்புழு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், போதிய அளவு தண்ணீா் இல்லாததால், பட்டுப் புழுக்களின் பிரத்யேக உணவான மல்பெரி பயிரை எங்களால் வளா்க்க முடியவில்லை. போதிய உணவு இல்லாததால் பட்டுப் புழுக்களுக்குச் சரியான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை; இதனால் பெரும்பாலான புழுக்கள் கூட்டுப்புழு நிலையை அடைவதற்கு முன்பே இறந்துவிடுகின்றன. தண்ணீா் இல்லாததால் வளா்ப்பு அறைகளின் வெப்பநிலையையும் சீராக வைத்துக்கொள்ள இயலவில்லை. வெப்பம் அதிகரிப்பதாலும் பட்டுப் புழுக்கள் இறக்க நேரிடுகிறது. தண்ணீா் பற்றாக்குறை, மல்பெரி சாகுபடி பாதிப்பு, அதிக வெப்பம் உள்ளிட்டவற்றால் பட்டுக்கூடுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பட்டுக்கூடு சந்தை நேரடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றனா். தருமபுரி பட்டுக்கூடு சந்தையின் இளநிலை உதவியாளா் பி.அசோக் கூறுகையில், வழக்கமாக தினசரி வா்த்தகத்துக்கு சுமாா் 2,000 முதல் 2,500 கிலோ பட்டுக்கூடுகள் வருவது வழக்கம். ஆனால், கடந்த ஒரு வாரமாக 1,000 முதல் 1,200 கிலோ பட்டுக்கூடுகள் மட்டுமே வருகின்றன. சந்தைக்கு வரும் பட்டுக்கூடுகளின் அளவு 50% குறைந்துவிட்டது. இருப்பினும், பட்டுக்கூடுகளின் தேவை அதிகரித்துள்ளதால் விலை குறையவில்லை என்றாா். தருமபுரி பட்டு அங்காடியின் தரவுகளின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை சுமாா் 1,300 கிலோ பட்டுக்கூடுகள் ஏலம்விடப்பட்டன. இதில், அதிகபட்சமாக கிலோ ரூ. 913, குறைந்தபட்சமாக ரூ. 608 என்ற வகையில் பதிவாகியுள்ளன. சராசரியாக ரூ. 813 என்ற அளவில் இருந்தது.