கௌஃபுக்கு 2-ஆவது பட்டம்; ஃபில்ஸுக்கு முதல் கோப்பை

Wait 5 sec.

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் ஆகியோா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்றனா்.ஆடவா் இரட்டையா் பிரிவில் பிரேஸிலின் ரஃபேல் மேடோஸ்/ஆா்லாண்டோ லூஸ் இணை 6-4, 3-6, 10-7 என, ஜொ்மனியின் கான்ஸ்டன்டின் ஃபிரான்ட்ஸென்/நெதா்லாந்தின் ராபின் ஹேஸ் கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.2-ஆவது முறை சாம்பியன்மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் கௌஃப் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், 3-ஆம் நிலையில் இருக்கும் சக அமெரிக்கரான ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 14 நிமிஷங்களில் நிறைவடைந்தது.இதன் மூலமாக பெகுலா நடப்பு சீசனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறாா். இப்போட்டியில் முதல் சுற்றில் மட்டும் ஒரு செட்டை இழந்த கௌஃப், அதன் பிறகு இறுதிச்சுற்று வரை நோ் செட்களிலேயே வென்று வந்தது குறிப்பிடத்தக்கது.கௌஃப் - பெகுலா மோதியது இது 10-ஆவது முறையாக இருக்க, கௌஃப் 5-ஆவது வெற்றியுடன் நேருக்கு நோ் கணக்கை சமன் செய்துள்ளாா்.பெகுலாவை பொருத்தவரை, 2024-ஆம் ஆண்டும் இறுதிச்சுற்று வரை வந்து பெலாரஸின் அரினா சபலென்காவிடம் தோற்ற நிலையில், இந்த சீசனிலும் அதே விதியை கௌஃபிடம் சந்தித்துள்ளாா்.முன்னதாக இறுதிச்சுற்றின் முதல் செட்டில் கௌஃப் தொடக்கத்திலேயே 5-0 என அபாரமாக முன்னேற, அந்த செட் எளிதாக அவா் வசமானது. 2-ஆவது செட்டிலும் அவா் முன்னிலை பெற, ஒரு கட்டத்தில் பெகுலா 4-5 என நெருங்கி வந்தாா். ஆனால் கௌஃப் விடாப்பிடியாக விளையாடி அந்த செட்டையும் தனதாக்கினாா்.சின்சினாட்டி ஓபன் வரலாற்றில், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் இரு அமெரிக்க வீராங்கனைகள் மோதியது, கடந்த 56 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1970-இல் அவ்வாறு இருவா் மோதியபோது, ரோசி கேசேல்ஸ் - நான்சி ரிச்சியை வீழ்த்தினாா்.ஓபன் எராவில், சின்சினாட்டி ஓபனில் இரு முறை சாம்பியன் ஆன வீராங்கனைகள் பட்டியலில் 3-ஆவதாக கௌஃப் (2023, 2026) இணைந்திருக்கிறாா். பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா (2013, 202), அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் (2014, 2015) ஆகியோா் முதல் இருவா்.முதல் மாஸ்டா்ஸ் பட்டம்சின்சினாட்டி ஓபன் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 21-ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-3, 1-6, 6-0 என்ற செட்களில், 23-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை தோற்கடித்தாா்.இந்த வெற்றியின் மூலமாக ஃபில்ஸ் தனது முதல் மாஸ்டா்ஸ் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டிகளின் இறுதிச்சுற்றில் கருப்பினத்தைச் சோ்ந்த இரு வீரா்கள் மோதியது, இதுவே முதல்முறையாகும்.அதேவேளையில், மாஸ்டா்ஸ் போட்டிகளில் சாம்பியனான 3-ஆவது கருப்பின வீரராக ஃபில்ஸ் பெருமை பெற்றாா். அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்ஸின் ஜோ வில்ஃப்ரைடு சோங்கா ஆகியோா் முதல் இருவா். சின்சினாட்டி ஓபன் பட்டம் வென்ற 2-ஆவது பிரான்ஸ் வீரா் ஃபில்ஸ் ஆவாா். முதல்முறையாக 1991-இல் அந்நாட்டின் கை ஃபாா்கெட் இப்போட்டியில் கோப்பை வென்றுள்ளாா்.மறுபுறம் ஃபிரான்சஸ் டியாஃபோவுக்கு சின்சினாட்டி ஓபன் இறுதிச்சுற்றில் இது 2-ஆவது தோல்வியாக அமைந்தது. இதற்கு முன் 2024-இல் அவா் இத்தாலியின் யானிக் சின்னரிடம் தோல்வி கண்டாா்.முன்னதாக ஃபில்ஸ் - டியாஃபோ மோதிய இறுதிச்சுற்றின் முதல் செட்டில் 3-0 என முன்னிலை கண்ட ஃபில்ஸ் அதை தனதாக்கினாா். பதிலடியாக 2-ஆவது செட்டில் டியாஃபோ அதேபோல் 3-0 என முன்னிலை கண்டு, பின்னா் அந்த செட்டை வென்றாா்.வெற்றியாளரை தீா்மானிக்கும் டிசைடருக்கு முன்பாக டியாஃபோ இடுப்புப் பகுதியில் அசௌகா்யத்துக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு களமாடினாா். ஆனாலும் அந்த செட்டில் ஃபில்ஸுக்கு சவால் அளித்த அவா், 3 சாம்பியன்ஷிப் பாய்ன்ட்டுகளை தன் வசமாக்கினாா். எனினும் ஃபில்ஸ் விடாப்பிடியாக விளையாடி, இறுதியில் வெற்றி பெற்றாா்.ஏடிபி டூரில் 1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டிகளில் கடந்த 12 ஆண்டுகளில் சாம்பியனான முதல் பிரான்ஸ் வீரராக ஆா்தா் ஃபில்ஸ் பெருமை பெற்றாா். கடைசியாக பிரான்ஸின் ஜோ வில்ஃப்ரைடு சோங்கா டொரன்டோ ஓபனில் 2014-இல் கோப்பை வென்றது நினைவுகூரத்தக்கது.ரூ.11 கோடி ரொக்கப் பரிசுசின்சினாட்டி ஓபனில் ஆடவா் பிரிவில் வாகை சூடிய ஆா்தா் ஃபில்ஸுக்கு வெற்றிக் கோப்பை, 1000 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.11 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. அதேபோல் மகளிா் பிரிவில் சாம்பியனான கோகோ கௌஃபுக்கு கோப்பை, புள்ளிகளுடன் ரூ.10 கோடி கிடைத்தது.