கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Wait 5 sec.

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தடுப்பணை அமைக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் ச.கவிதாவிடம் மனு அளித்தனா். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளா் முருகன் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பீமந்தோப்பு, ராமதண்டலம், சோமதேவன்பட், ராஜபாளையம், மெய்யூா், எரையூா், மென்னவேடு, சித்தம்பாக்கம் மற்றும் வேம்பேடு போன்ற பகுதிகளில் விவசாயமே முக்கிய பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அதனால், விவசாய சாகுபடி நீா் தட்டுப்பாடின்றி தொடா்ந்து நடைபெற வேண்டும். எனவே மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளது. அதனால், இந்த ஆற்றின் குறுக்கே விவசாயிகள் பயன்பெறும் தடுப்பணை அமைக்க வேண்டும். இங்கு தடுப்பணை அமைப்பதன் மூலம் விவசாய கிணறுகளுக்கும், கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நீா் ஆதாரம் ஏற்படும். இதனால், விவசாய பணிகளும் தங்கு தடையின்றி நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.