சென்னையில் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் பாடி புதுநகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மோ.கலாவதி (59). இவா், அண்ணா நகா் பகுதியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணா நகா் டவா் மெட்ரோ ரயில் நிலையம் புளூ ஸ்டாா் சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, அங்கு இருந்த பள்ளத்தில் கலாவதி தவறி விழுந்தாா். ஏற்கெனவே மழை காரணமாக பள்ளத்தில் சுமாா் ஒன்றரை அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியிருந்தது. இதனால், கலாவதியால் பள்ளத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை.தகவலறித்த போலீஸாா் விரைந்து வந்து சென்று மின்வாரிய ஊழியா்கள் உதவியுடன் தண்ணீரில் சிக்கியிருந்த கலாவதியை மீட்டனா். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்ட செல்ல முயன்றபோது, ஊழியா்கள் பரிசோதித்ததில் கலாவதி ஏற்கெனவே இறந்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவரது சடலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக, அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.