சமையல் என்பது வெறும் உணவைத் தயாரிப்பது மட்டுமல்ல; அதற்கு நேரம், திட்டமிடல், அனுபவம், பொறுமை, உழைப்பு எனப் பல விஷயங்கள் தேவை. இதிலும் ஏ.ஐ. நுழைந்துவிட்டது. 'ஏ.ஐ. சமையல்' எனும் இயந்திரம், சமையல்காரரைப் போல முழுமையாகச் சமைத்துவிடும். ஸ்மார்ட் குக்கர், ஆட்டோ குக்கிங் மெஷின், கிச்சன் ரோபோட், குக்கிங் அசிஸ்டென்ட், ரோபோடிக் செப் உள்ளிட்ட பல சாதனங்கள் உருவாகி வருகின்றன. சில சாதனங்கள் வெப்பநிலை, நேரத்தைத் தானாகக் கட்டுப்படுத்துகின்றன. சில சாதனங்கள் உணவைக் கலக்குகின்றன. சில சாதனங்கள் நறுக்குதல், அரைத்தல், மாவு பிசைதல் போன்ற பணிகளைச் செய்கின்றன. மேலும் மேம்பட்ட சாதனங்கள் காமரா, சென்சார், மென்பொருள், ஏ.ஐ. ஆகியவற்றைப் பயன்படுத்தி, சமையல் நடைபெறும் நிலையைக் கண்காணிக்க முயற்சிக்கின்றன.ஒரே இயந்திரத்தில் பல சமையல் வேலைகள்ஒரு நவீன கிச்சன் ரோபோட்டை எடுத்துக் கொண்டால் பொருள்களை நறுக்குதல், அரைத்தல், கலக்குதல், வதக்குதல், வேகவைத்தல், ஆவியில் வேக வைத்தல், மாவு பிசைதல், உணவைச் சூடாக வைத்தல், குறிப்பிட்ட வெப்பநிலையைப் பராமரித்தல், குறிப்பிட்ட நேரத்தில் சமையல் முடித்தல், சில சமையல் குறிப்புகளுக்குத் தானாக வழிகாட்டுதல், சில மாடல்களில் தானே சுத்தப்படுத்தப்படுத்தும் வசதி உள்ளிட்ட சிறப்புகள் உள்ளன. ஏ.ஐ. சமையல் என்றால் குழம்பு, சாதம் மட்டும் அல்ல; ரொட்டி, சப்பாத்தி தயாரிப்பும்தான். மாவு பிசைதல், உருட்டுதல், சுடுதல் வரை பல பணிகளை இயந்திரம் செய்யும் வகையில் தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. இதனால் சமையல் விரைவில் முடியும்.இந்தியாவில் ....இந்தியச் சந்தையில் காணப்படும் முக்கியமான ஸ்மார்ட் குக்கிங் சாதனங்களில் ஒன்று 'வொண்டர்புல்ஷெப் ஷெப் மேஜிக்'. பல பணிகளை ஒரே அமைப்பில் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.7 லிட்டர் குக்கிங் ஜார், 1,800 டபிள்யூ பவர், 180 செல்சியஸ் வரை வெப்பநிலை, எடை அளவு, வைஃபை போன்ற வசதிகளையும் நிறுவனம் குறிப்பிடுகிறது. இதில் செட்டிங்ஸில் சமையல் குறிப்பைத் தேர்வு செய்தால், படிப்படியாக வழிகாட்டும் வசதியும் உள்ளது.பெங்களூரைச் சேர்ந்த 'எப்போஸ்டிக்ஸ் லேப்ஸ்' என்ற 'ஏ.ஐ. குக்கிங் ரோபோட்' சமையலின் பல கட்டங்களை மேற்கொள்கிறது. சமையல் செய்முறையைத் தேர்ந்தெடுத்தல்,கண்காணித்தல் வரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.ஏ.ஐ. சமையல் இன்றும், நாளையும்...சமைக்கத் தெரியாதவர்கள் தேவையான பொருள்களைத் தயாராக வைத்துக் கொள்கிறார்கள். அதன்பிறகு இயந்திரம் அடுத்தடுத்த செயல்முறைகளுக்கு வழிகாட்டுகிறது. ஏ.ஐ. சமையல் சாதனத்தில் வெப்பநிலை, எடை, நேரம் போன்ற தகவல்களை சென்சாரில் அறிய முடியும். மேம்பட்ட ரோபோட்டிங் சிஸ்டம்ஸில் காமிராவில் உணவின் நிலையை கண்காணிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சமையல் குறிப்பில் ஒவ்வொரு கட்டத்தையும் சாப்ட்வேர் நிர்வகிக்கிறது. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சமையல் வகைகளைத் திட்டமிடவும் மாற்றியமைக்கவும் ஏ.ஐ. பயன்படும். மிகவும் மேம்பட்ட ரோபோடிக் ஷெப் அமைப்புகளில் ரோபோட்டிக்கில் பாத்திரத்தைக் கையாளுதல், பொருள்களைச் சேர்த்தல், கிளறுதல் போன்ற செயல்கள் செய்யப்படலாம்.சாட் ஜிபிடி ஏ.ஐ.யிடம் இயல்பான மொழியில் கேள்வி கேட்கிறோம். அதே தொழில்நுட்பம் 'குக்கிங் ரோபோட்'டில் இணைந்தால், 'நான்கு பேருக்கு சாம்பார் செய். உப்பு குறைவாகவும், காரம் மிதமாகவும் இருக்கட்டும். வீட்டில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டை இருக்கிறது. அந்தப் பொருள்களை வைத்து தயாரிக்கக்கூடிய உணவுகளைச் செய்' என்றெல்லாம் கூறமுடியும். அதோடு செலவு, நேரம், காய்கறிகள், அசைவ உணவுகள், குழந்தைகளுக்கான உணவு, வயதானவர்களுக்கான உணவு போன்ற விருப்பங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் சமையல் உதவியாளர்கள் உருவாகலாம். எதிர்கால ஏ.ஐ. சமையலறையில் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை, சமையல் குறிப்புகளைச் சேமித்து வைத்துக்கொண்டு, மாற்றும் வசதிகள் அதிகரிக்கலாம்.இதில், ஏ.ஐ.யின் உதவியை மருத்துவர்கள், உணவியல் நிபுணர்களுக்கு மாற்றாக நினைக்கக் கூடாது.காலை 8 மணிக்கு அலுவலகத்துக்குச் செல்லும் இளைஞர்கள், மாணவர்கள், மாலை வீடு திரும்பும்போது சமையல் செய்ய வேண்டிய நிலை. இப்படிப்பட்டவர்களுக்கு உணவைத் தயாரித்து நேரத்தை மிச்சப்படுத்தலாம். சமையல்காரர்களின் வேலைக்கு ஆபத்தா?சமையல்காரர்களின் வேலைக்கு ஆபத்தா? என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது. பெரிய அளவில் உணவை தயாரிக்கும் இடங்களில் வேலைவாய்ப்புக் குறையலாம். அதே நேரத்தில் ரோபோட் ஷெப் ஆபரேட்டர், கிச்சன் ஆட்டோமெஷன், ஏ.ஐ. ரெசிபி டெவலப்பர், உணவு ரோபோடிக்ஸ் இன்ஜினீயர், ஸ்மார்ட் கிச்சன் சர்வீஸ் டெக்னிஷியன், ஏ.ஐ. உணவுப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட புதிய பணிகள் உருவாகக்கூடும்.