எங்கே அவள்?

Wait 5 sec.

டாக்டர் கிருஷ்ணகுமார் தனது மேஜையிலிருந்த சி.சி.டி.வி மானிட்டரின் பல அடுக்குத் திரையில், அவன் தென்பட்ட சதுரத்தை விரிவாக்கிப் பார்த்தார்.அவன் பதட்டமாக இருந்தான்.தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் நபரின் அடையாளம் பரிச்சயப்படவும், உடல்நலத்தின் தீவிரத் தன்மையை ஓரளவுக்கு முன்கூட்டியே யூகிக்கவும் அப்படிக் கவனிப்பது வழக்கம்.காத்திருக்கும் அறையில் அவன் பக்கத்து இருக்கையில் யாருடனோ, பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது. ஆனால், அடுத்த இருக்கை காலியாக இருந்தது. ஒருவேளை ஒலித்தோடுகள் உதவியுடன் கதைக்கிறானோ என்றால், அவன் செவியில் ஏதும் தென்படவில்லை.நர்ஸ் டெய்ஸி டேனியல், அவன் சம்பந்தமான மருத்துவக் கோப்புகளைக் கொண்டு வந்து மேசையில் வைத்தாள்.இளநகை அறிவழகன், இருபத்தேழு வயது இளைஞன். பக்கங்களைத் திருப்ப, பிரிட்டனில் நவம்பர் மாதத்தில் தலைகாட்டும் குளிர்ஜுரம், பல்வலி - மருத்துவக் குறிப்புகளில் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி உடற்குறை எதுவும் இல்லை. கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையின் அகலமான பழங்கால மாடி ஜன்னல்கள் வழியே கீழே பார்த்தார் டாக்டர். லண்டன் மாலைநேரப் போக்குவரத்து அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. வாகனங்கள் பிரதான சாலை சிக்னலின் விடுதலைக்காகக் காத்துக்கொண்டிருந்தன. சிவப்பு நிற மாடிப் பேருந்து கண்ணாடிகளில் தோன்றி மறையும் மரநிழல்களின் பிரதிபலிப்புகளுக்கு இடையே, மஞ்சள் சூரியன், வழுக்கி விழுந்து கொண்டிருந்தது. நேற்றுதான் சென்னையிலிருந்து ஸ்காட்லாந்துக்கு, உயர் மருத்துவக் கல்விக்காக வந்தது போல் இருக்கிறது. அதற்குள் நான்கு தசாப்தங்கள் ஓடிவிட்டன.'மிஸ்.டேனியல், இன்று உன் மகளுக்குப் பிறந்த நாள் என்றீர்களே, என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள். அந்த பேஷண்டை வரச் சொல்லிவிட்டு நீங்கள் கிளம்பலாம்'. மாலை வணக்கத்தைச் சொல்லியபடி உள்ளே வந்தவன், மீண்டும் கதவு சரியாகச் சாத்தியிருக்கிறதா? என்று ஒருமுறை அழுத்திப் பார்த்தான். பார்வையில் ஐ.டி கம்பெனிக்கான குணநலன்கள் தெரிந்தன.'மிஸ்டர். அறிவழகன்... இன்றைய நாள் எப்படி இருக்கிறது?' 'ரொம்ப சுமார்.'அவனை இயல்புக்குக் கொண்டுவர, 'என்ன... இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்து விட்டீர்களா?''எங்களுக்குக் காலம், நேரமெல்லாம் கிடையாது டாக்டர். எல்லா தருணத்திலும் மின்னஞ்சல்கள், பதிலுக்காகக் காத்திருக்கும். எதாவது கான்கால் ஓடிக்கொண்டேயிருக்கும்...'எழுந்து ஸ்டெத்தஸ்கோப்பின் வட்ட முனையால், அவன் மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தவாறு, 'சொல்லுங்கள், என்ன பிரச்னை?' 'ஒருத்தி என்னை தினமும் துரத்துகிறாள், டாக்டர்!'டாக்டர் அவர் நாடியைப் பிடித்தபடி புன்னகையுடன், 'அதற்கு நீங்கள் லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீசை அல்லவா பார்க்க வேண்டும்?''அதுதான் முடியாது, காரணம் துரத்துவது ஒரு கற்பனைப் பாத்திரம்.''கற்பனையா? இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?''அது வந்து...''இந்த சாய்வு படுக்கையில் ரிலாக்ஸ்டாக சாய்ந்து கொள்ளுங்கள். பி.பி பார்த்து விடுகிறேன்...''அதிகமா இருக்கா டாக்டர்?''மருத்துவருக்கு முன்னால் ரத்த அழுத்தம் எடுத்தால் எப்பொழுதுமே அளவு சற்று கூடுதலாகத்தான் காட்டும். நானே வெள்ளைக்கோட்டை மாட்டிக்கொண்டு, எனக்கே எடுத்தால், பத்து பாயிண்ட் அதிகம் வரும்' என்றார் புன்னகையுடன்.'டாக்டர் நீங்கள் பார்ப்பதற்கு என் ஆதர்ஷ பாடகர் எஸ்.பி.பி போல இருக்கிறீர்கள். தமிழ்நாடா?''ஆமாம்; மேலே சொல்லுங்கள்...''அந்தக் கற்பனைப் பாத்திரம், நான் தூங்கி விழிப்பதுமுதல், இரவு உறங்கும் வரை என் கூடவே இருக்கிறது டாக்டர்!''இங்கே குடும்பத்துடன் இருக்கிறீர்களா?''இல்லை. இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. லெஸ்டர் யூனிவர்சிட்டியில்தான் எம்.எஸ். செய்தேன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிநவீன டேட்டா சென்டரைப் பார்த்துக் கொள்கிறேன். நுட்பமான பணி. ஏதாவது பிரச்னை வந்து சர்வர் செயலிழந்தால், முக்கியத் தரவு சேமிப்புக்காக எங்களை நம்பி ஒப்படைத்திருக்கும் கிளையண்ட்களுக்கு, பில்லியன் கணக்கில் நஷ்டம் வைக்கும். ஆக, ஹாட் சீட்டில் அமர்ந்து கொண்டிருக்கிறேன். கீழே நெருப்பு, மேலே கத்தி...''அந்தப் பெண்ணைப் பற்றி சொல்லுங்கள்?''யார் தீபிகாவா?''அவங்க யாரு?'அதுதான் என் கற்பனை பாத்திரத்துக்கு, நான் வைத்திருக்கும் பெயர்.''இங்கேயும் வந்திருக்காங்களா?''வெளியே உட்காரச் சொல்லிவிட்டு வந்திருக்கேன்.''அவள் எங்கே எல்லாம் வருகிறாள்?''காலையில் புரூக்வெல் பார்க்கில், ஜாகிங் செய்யும்போது, விக்டோரியா லைன் ரயிலில் போகும்போது, கோஸ்டா காஃபி ஷாப்புக்கு, வெம்பிலி கால்பந்து மைதானத்துக்கு, விம்பிள்டன் விநாயகர் கோயிலுக்கு, வின்ஸ்டன் திரையரங்குக்கு என்று இப்படி விடாமல், போகுமிடம் எங்கும் வந்து தொல்லை தருகிறாள்.''எதாவது பேசுவாங்களா?''அநியாயத்துக்கு வாய்; எதுக்கெடுத்தாலும் கருத்துச் சொல்வாள். சில சமயம் ஆர்கியூமெண்ட்ல போய் முடியும்.''இண்ட்ரெஸ்டிங். மொதல்ல சில மாத்திரைகள் எழுதித் தரேன். வேலைப் பளு, பதட்டம், மனச்சோர்வு எது வேணா முதல் காரணமாக இருக்கலாம். ஆபிஸூக்கு ஒரு வாரம் லீவ் போடுங்க. நல்லா தூங்கி ஓய்வெடுங்க. இசை ஞானியைப் பிடிக்குமா?''உயிர்.''நிறைய பாட்டுக் கேளுங்க, தலைல எப்பவாவது அடிபட்டது உண்டா?''ஆமாம் டாக்டர். சென்னை மழை சீசன்ல, நிஷா புயல் அடிச்ச சமயத்துல அட்வர்டைஸ்மெண்ட் போர்டு ஒன்னு கீழே விழ, தலைல லைட்டா காயம் ஆயிடுச்சு. தையல் போட்டு...'டாக்டர் கிருஷ்ணகுமார் கணினியில் தரவுகளை ஏற்றிவிட்டு,'சைக்கிரியாட்டிஸ்ட் சந்திக்க பரிந்துரை செய்திருக்கிறேன். தலைல அடிபட்டதால இல்யூஷன் வரும்னு நான் எதிர்பார்க்கல, எதுக்கும் மல்டி பிளானர் பிரைன் ஸ்கேன் செய்ய எழுதிக் குடுத்துருக்கேன். திரும்பச் சந்திப்போம்.'இரண்டு வாரம் கழித்து வந்தான்.'இப்ப எப்படி இருக்கு?''ரொம்ப மோசமா போயிட்டிருக்கு டாக்டர். பொதுவா ஆபீசுக்கெல்லாம் அவ வரமாட்டா. இப்ப அதுவும் மாறிப் போச்சு. அன்னைக்கு அப்படித்தான், முக்கியமான ரெவியூ மீட்டிங். பக்கத்து இருக்கை காலியா இருந்தது. வந்து உட்கார்ந்துட்டா. சும்மா இல்லாம கையைக் கோர்ப்பதும், கன்னத்தைத் தடவறதுமாக ஒரே படுத்தல்...''ஒரு கட்டத்துல தாங்க முடியாமல் ஏய்... ச்சி விடுடினு கத்திவிட்டேன்.பார்த்தால், பிரசண்டேஷனை நிறுத்திவிட்டு, என் சீனியர் மேனேஜர் உட்பட அனைவரும் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் சகாக்கள் வேற மீட்டிங்கில் இருந்தார்கள்.ரொம்ப சங்கடமாக போய்விட்டது. நண்பர்கள் எல்லாம் இப்போது என் நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். "இவள்' என் வேலைக்கு உலை வைத்து விடுவாளோ? என்று பயமாயிருக்கு டாக்டர்!''இன்னும் சைக்கிரியாட்டிஸ்ட் மருத்துவரைச் சந்திக்கவில்லையா?''எங்கேயும் அப்பாய்ன்மெண்ட்டே கிடைக்கல'என்றான் ஆயாசத்துடன்.'சில மருத்துவமனைகளை தொடர்பு கொண்டுவிட்டு, 'வாட்ஃபோர்ட் ஜெனரல் மருத்துவமனையில் ஒரு ஸ்லாட் இருக்கிறது. அவ்வளவு தூரம் போக முடியுமா?''சந்திரமண்டலத்திற்குக்கூடப் போகத் தயார் டாக்டர்!' மேலும் சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்து, 'அங்கு டாக்டர் ஹட்சனைப் பார்க்க வேண்டியிருக்கும். அவர் ஆலோசனைப்படி மேற்கொண்டு பார்க்கலாம். கவலைப்படாதீங்க!''நன்றி டாக்டர்!'அவன் எழுந்துகொண்டான். அடுத்து அவன் வர வேண்டிய சந்திப்புகளைத் தவற விட்டான். நர்ஸ் டெய்ஸி மறு அட்டவணை தேதி, மாற்றி அனுப்பியதற்கும் அவன் வரவில்லை.அடுத்தடுத்த நோயாளிகள்; அடுக்கடுக்கான வேலைகள். நாள்காட்டி, அடுத்தவரைப் பற்றி கவலைப்படாமல், வருடங்களை நகர்த்த, டாக்டர் கிருஷ்ணகுமார் அவனை மறந்தே போனார்.ஒரு மருத்துவக் கருத்தரங்குக்காக டாக்டர் கிருஷ்ணகுமார், சென்னை வரவேண்டியிருந்தது.தனியாக வந்ததால் பெசன்ட்நகரில் தன் நண்பர் வீட்டில் தங்கினார். காலை சூரியன் எழுவதற்குள் கடற்கரை நடை, மருத்துவக் கல்லூரி பழைய நண்பர்களுடன் சந்திப்பு என நான்கு நாள்கள் இனிமையாகக் கழிந்தன.மறுநாள் இரவு லண்டன் கிளம்ப வேண்டும். திருவொற்றியூர் போய் வட்டப்பாறை அம்மனுக்குப் புடவை சாத்த வேண்டும் என்கிற தன் மனைவியின் வேண்டுதலைப் பற்றி நண்பரிடம் சொல்ல,'மெட்ரோல போயேன், டிராபிக்லயிருந்து தப்பிக்கலாம்' என்ற ஆலோசனையை ஏற்றார்.சென்னை நகரத்தின் கீழ், மேல்தட்டுகள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாரபட்சமின்றி கண்ணாடியாக வெளிச்சம் போட்டு காட்டியபடி விரைந்து கொண்டிருந்தது சென்னை மெட்ரோ.'ஹலோ டாக்டர்... என்னை நினைவிருக்கிறதா?' குரல் கேட்டுத் திரும்பினார், டாக்டர் கிருஷ்ணகுமார்.'நான் இளநகை... இளநகை அறிவழகன். உங்களை லண்டன் கிங்ஸ் ஹாஸ்பிடலில் சில வருடங்கள் முன் சந்தித்தேனே?. "கற்பனையாக ஒரு பெண்' என்னைத் துரத்திக்கொண்டு இருக்கிறாள் என்று...''ஓ... யெஸ். நினைவிருக்கிறது. இரண்டு சிட்டிங் பிறகு நீங்கள் வரவில்லையே? இப்ப எப்படி இருக்கிறீர்கள்?''பிரச்னை சரியாகி விட்டது டாக்டர். அதனால் வரவில்லை...''ஓ! நல்லது. பிரைவேட்டாகப் பார்த்துக் கொண்டீர்களா?''அதெல்லாம் இல்லை, டாக்டர்!''வாங்க இடம் இருக்கு, உட்காருங்க. எப்படிச் சரியாச்சு?''என் நண்பர்களோட இங்கிலாந்தின் வடக்கிலுள்ள ஸ்கேஃபெல் மலைக்கு ஒருமுறை டூர் சென்றிருந்தேன். அவளும் என் கூட வந்திருந்தாள், அதாவது என் "கற்பனை‘ அவள்...' 'எதாவது பிரச்னை ஆச்சா?''ஆமாம் டாக்டர். டூர் முழுக்க அவளால் ஒரே டார்ச்சர். என் ரூம் மேட்டுடன் இருவருக்கான அறையில் தங்கியபொழுது, அவளும் என்னுடன் இரவில் வந்து தங்குவேன் என்று தொந்தரவு செய்தாள்...''அப்புறம்?''அடுத்த நாள் விடியற்காலை, நண்பர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தபொழுது நான் எழுந்து வெளியே கிளம்பினேன். அவளும் ஜாகிங் வருகிறேன் என்றாள்.வேகமாக மலை உயரே ஓடினேன். அவளும் தொடர்ந்து ஓடி வந்தாள்.மேகம் தொடும் மலை உச்சி முகட்டில் ஒரு பாறையின் மீது நின்றேன். அவளும் மூச்சு வாங்க ஓடி வந்து என் பக்கத்தில் நின்றாள். ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், அத்தனை உயரத்திலிருந்து அவளை ஒரே தள்ளாக அதல பாதாளத்தில் தள்ளி விட்டேன்...''அய்யோ!''கற்பனைப் பாத்திரம்தானே... டாக்டர்!''யெஸ்... புரிகிறது.''அதோடு அவள் தொலைந்தாள். திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன்.''இப்போது எப்படி இருக்கிறீர்கள்?''நன்றாக... மகிழ்ச்சியாக!''எத்தனை நாள்கள் இந்தியாவில் இருப்பீர்கள்?''இன்னும் ஒரு மாசம் ஆகலாம். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பார்க்க குடும்பத்தோடு வந்தேன். விம்கோ நகரில் வீடு...''ஓ, கல்யாணம் ஆகிவிட்டதா?''ஆமாம் டாக்டர். லண்டனில் உயர்கல்வி படிக்க வந்து பிறகு எங்கள் கம்பெனியில் இன்டர்ன்ஷிப் செய்தவளை காதலித்து மணந்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பையன்.''அவர்களும் உங்களுடன் பயணம் செய்கிறார்களா?'என் மனைவி தற்போது என் அம்மாவைப் பார்த்துக் கொள்ள வீட்டில் விட்டு விட்டு வந்திருக்கிறேன். என் பையன் மட்டும் இப்போது என்னுடன் வந்திருக்கிறான்...''எங்கே?''அதோ... ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கான்.ஏய் தினேஷ் இங்கே வா, டாக்டர் அங்கிளுக்கு ஹலோ சொல்லு...'டாக்டர் கிருஷ்ணகுமார் கையை நீட்டியபடி திரும்ப,எதிர்ப்புறத்தில் எந்தச் சிறுவனும் இல்லை.