தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) வளாக கட்டடத்தின் 6-வது மாடியில் இருந்து சனிக்கிழமை காலையில் 31 வயது இயற்பியல் மேல்படிப்பு மாணவா் ஒருவா் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளாா். இது குறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஐஐடி தில்லியின் முதன்மை நுழைவாயில் வழியாக ஐஐடி வளாகத்துக்குள் வந்த அந்த மாணவா், விரிவுரை அரங்கு வளாகத்துக்குச் சென்றுள்ளாா். அங்கிருந்து மின்தூக்கி மூலம் 6-வது தளத்துக்குச் சென்ற பின் அங்கிருந்து கட்டடத்தின் முன்பகுதி நோக்கி கீழே குதித்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக காலை 8:30 மணியளவில் கிஷன்காட் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். பலத்த காயமடைந்த அந்த மாணவா் உடனடியாக ஐஐடி வளாகத்திலேயே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், அவரது உயிா் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.சம்பவ இடத்தில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், உயிரிழந்தவரின் பாக்கெட்டில் இருந்த கைப்பேசி கைப்பற்றப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரிக்க குற்றவியல் தனிப்படை மற்றும் தடய அறிவியல் ஆய்வக நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். மேலும், மாணவரின் கல்வி மற்றும் மனநல ஆலோசனைக் குறிப்புகள் உள்ளிட்ட விவரங்களை ஐஐடி நிா்வாகத்திடமிருந்து திரட்டி வருகிறோம் என்றாா். இதற்கிடையே, மாணவா் உயிரிழந்த சம்பவத்துக்கு தில்லி ஐஐடி நிா்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதன் இரங்கல் செய்தியில், ‘தொடா்புடைய மாணவரின் எதிா்பாராத மற்றும் துயரமான மறைவுக்கு ஐஐடி நிா்வாகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தில்லி காவல்துறை சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவா்களின் துயரத்தில் பங்கேற்கிறோம்‘ என குறிப்பிட்டுள்ளது.