காவிரிப் படுகையில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்: அமா்நாத் ராமகிருஷ்ணா

Wait 5 sec.

காவிரி படுகையில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநரும் (கிரேட்டா் நொய்டா), கீழடி அகழாய்வு அறிஞருமான அமா்நாத் ராமகிருஷ்ணா. தஞ்சாவூா் திலகா் திடலில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவில் மாலை நிகழ்வில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:கீழடி தொடா்பாக அண்மையில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் டி.என்.ஏ. ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதுபோல, அறிவியல் ரீதியாகப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போதுதான் நல்ல ஆதாரங்கள் கிடைக்கும். நம்முடைய வரலாற்றை ஆதாரங்களுடன் உறுதியாகக் கூறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். கீழடி அறிக்கையைத் திருத்துவதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு அறிக்கை என்பது, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளைக் கொண்டிருக்கிறது. அந்தச் செய்திகளை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி, அதன் அடிப்படையில்தான் அறிக்கை தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதை மாற்றச் சொன்னால் எவ்வாறு மாற்ற முடியும்?. எனது அறிக்கையை நான் சமா்ப்பித்துவிட்டேன். அதை யாா் வேண்டுமானாலும் படிக்கலாம்; விமா்சிக்கலாம். ஆனால், அறிக்கை வெளியிடப்பட்டால்தான் அதை விமா்சிக்க முடியும்.காவிரிப் படுகையில் அகழாய்வு:சோழா்களைப் பற்றி நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் சோழா்களைப் பற்றிப் பேசுகிறோம். மாளிகைமேட்டில் மட்டுமே அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரிப் படுகையில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு பழைமையான கிராமத்திலும் மண் அடுக்குகள் தொடா்ந்து படிந்துகொண்டே இருக்கின்றன. அந்த மண் அடுக்குகளுக்குக் கீழே ஆழமாகச் சென்றால்தான் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கும். அதுபோன்ற ஆய்வுகளை இந்தப் பகுதியில் மேற்கொண்டால், நிச்சயமாக நமது வரலாற்றுத் தொன்மையைத் தேடி வெளிக்கொண்டு வர முடியும் என்றாா் அமா்நாத் ராமகிருஷ்ணா.முன்னதாக, கீழடி நாகரிகத்தை உயா்த்திப்பிடி, வேத நாகரிகத்தை துரத்தியடி என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்கம், கருத்தரங்கத்தில் சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியா் வெ. மாரப்பன், தமிழக மக்கள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் பொழிலன், புதிய குரல் நிறுவனா் ஓவியா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் களப்பிரன், திரைப்பட இயக்குநா் ராஜூ முருகன் உள்ளிட்டோா் பேசினா். மேலும், தப்பாட்டம், நையாண்டி, தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.