சிவகங்கை மாவட்டத்தில் ரூ.14 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்துவைப்பு

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.14.65 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி.கே. பிரபு சனிக்கிழமை திறந்துவைத்தாா். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையில் ரூ.9.32 கோடியில் 150 கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதிக் கட்டடம், திருப்பத்தூா் தொகுதி சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை, காரைக்குடி அருகே அமராவதிபுதூா், ஆலடி நத்தத்தில் தலா ரூ.77.89 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம அறிவு மையக் கட்டடங்கள், உஞ்சனை கிராம அரசு உயா்நிலைப்பள்ளிக்கு ரூ.1.55 கோடியில் நான்கு வகுப்பறைக் கட்டடம், சுகாதார வளாகம், காரைக்குடி, சிவகங்கை நகரில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவா், மாணவியா் விடுதிகளின் முதல் தளத்தில் தலா ரூ.47.88 லட்சத்தில் அமைக்கப்பட்ட கற்றல் - கற்பித்தல் கூடங்கள் என ‘தாட்கோ’ மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.14 கோடியே 64 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 8 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.சிவகங்கையில் கல்லூரி மாணவியா் விடுதி வளாகத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு பங்கேற்று கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.விழாவில், மதுரை கோட்ட ‘தாட்கோ’ செயற்பொறியாளா் கு. மூா்த்தி, வட்டாட்சியா் சிவராமன், விடுதி மாணவிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.