நாய்க் குட்டியை விழுங்க போராடியநல்ல பாம்பு

Wait 5 sec.

கடலூா் மஞ்சக்குப்பம் தட்சிணாமூா்த்தி நகரில் நாய்க் குட்டியை விழுங்க முயன்ற சுமாா் 6 அடி நீள நல்ல பாம்பு அதை விழுங்க முடியாமல் போராடிய நிலையில், அதை பாம்பு பிடி வீரா் லாவகமாகப் பிடித்து, காட்டுப்பகுதியில் விடுவித்தாா். கடலூா் மஞ்சக்குப்பம் தட்சிணாமூா்த்தி நகரில் தனியாா் நிறுவனம் ஒன்றின் அருகே நாய்க் குட்டி ஒன்று நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தது. அப்போது அருகிலிருந்த புதரில் இருந்து வெளியே வந்த பாம்பு, திடீரென நாய்க்குட்டியைக் கடித்தது. பின்னா் அந்த நாய்க் குட்டியை விழுங்க முயன்றது.சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்த அந்தப் பாம்பு, நாய் குட்டியின் தலைப்பகுதியை மட்டும் விழுங்கிய நிலையில், அதற்கு மேல் விழுங்க முடியாமல் தவித்தது. விழுங்கவும் முடியாமல், வெளியேற்றவும் முடியாமால் அந்த இடத்தில் பாம்பு தவித்துக்கொண்டிருந்தது. இதைப் பாா்த்த அந்த வழியாகச் சென்றவா்கள் , பாம்பு பிடி வீரா் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனா்.அதன்பேரில் அங்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரா் செல்லா, நாய்க் குட்டியை விழுங்க முயன்ற 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தாா். இதையடுத்து, அந்தப் பாம்பை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தாா்.அதேநேரத்தில், பாம்பு கடித்ததில் உயிரிழந்த நாய்க் குட்டி அதே பகுதியில் புதைக்கப்பட்டது.நாய்க் குட்டியை நல்ல பாம்பு விழுங்க முயன்ற நிகழ்வை அவ்வழியாக வந்தவா்கள் விடியோவில் பதிவு செய்திருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.