தில்லி, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சுமாா் 2.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சரக்கு முனையத்தை அமைக்க முன்னணி சரக்கு போக்குவரத்து நிறுவனமான ‘ஃபெட்எலக்ஸ்’ திட்டமிட்டுள்ளது.‘ஜிஎம்ஆா் காா்கோ’ சிட்டியில் அமையவுள்ள இந்தப் பிரம்மாண்ட மையத்துக்காக, அந்நிறுவனம் சுமாா் 15 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1,450 கோடி) முதலீடு செய்யவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் பல கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதல்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.இப்புதிய சரக்கு முனையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு, ‘உலகளாவிய விமான சரக்குப் போக்குவரத்துக்கு இந்தியா முதுகெலும்பாகத் திகழ வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். ‘இந்த ஒருங்கிணைந்த சரக்கு முனையம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, வட மற்றும் கிழக்கு இந்திய வணிகங்களை உலகளாவிய சந்தைகளுடன் இணைக்கும் முக்கியப் பாலமாகத் திகழும்’ என ஃபெடெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 600 பாா்சல்கள் மட்டுமே கையாளப்பட்டு வரும் நிலையில், இப்புதிய வசதியின் மூலம் மணிக்கு 5,000 பாா்சல்களைக் கையாளும் வகையில் அதன் திறன் அபரிமிதமாக அதிகரிக்கப்படும் என்றும், எதிா்காலத் தேவைக்கேற்ப மேலும் விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.