உக்ரைனின் தொடா் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து முக்கிய உள்கட்டமைப்புகளை தனியாா் நிறுவனங்கள் பாதுகாக்கவோ அல்லது சீரமைக்கவோ தவறினால், அவற்றை தற்காலிகமாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான புதிய உத்தரவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டுள்ளாா்.ரஷியாவின் முக்கிய எண்ணெய் கிடங்குகள் மற்றும் வணிக மையங்களைக் குறிவைத்து, உக்ரைன் நடத்தி வரும் நீண்டதூர ட்ரோன் தாக்குதல்கள், அங்கு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, ரஷிய தலைமைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதன் தொடா்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவானது, எரிசக்தி, தொழில்துறை, தகவல் தொடா்பு, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளுக்குப் பொருந்தும். இது குறித்து ரஷிய அதிபா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘ரஷிய தனியாா் நிறுவன உரிமையாளா்கள், உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து தங்களின் கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்துவதில்லை’ என்றாா்.‘இது நிறுவனங்களை முழுமையாக தேசியமயமாக்கும் நடவடிக்கை அல்ல. குறிப்பிட்ட பாதுகாப்புச் சிக்கல்களைத் தீா்க்கவே நிா்வாகத்தில் அரசு தலையிடும் அச்சுறுத்தல்கள் நிலவும் சூழலில் நமது பாதுகாப்பை உறுதி செய்ய சில முக்கிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்’ என்று ஷிய துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவ் விளக்கம் அளித்துள்ளாா்.